பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


தற்குத் தக்க காரணம் ஏதாவது ஒன்று மறைவாக இருக்கத்தான் வேண்டும் என அவர்கள் எண்ணினர். அதற்குரிய காரணமாக அவர்கள் உய்த்துணர்ந்துயூகித்துக் கண்டதாவது:-


இந்தப் பிறவியில் நன்மை செய்பவர்கள் துன்பமுறுவதற்குரிய காரணம், அவர்கள் முற்பிறவியில் செய்த தீவினையாகத்தான் இருக்கவேண்டும்; இந்தப் பிறவியில் தீமை செய்பவர்கள் இன்பம் எய்துவதற்குரிய காரணம், அவர்கள் முற்பிறவியில் ஆற்றிய நல்வினையாகத்தான் இருக்க வேண்டும்-என்பதுதான் அவர்களின் உய்த்துணர்வு. இவ்வாறு முற்பிறவியில் செய்த வினைக்கு ‘ஊழ்வினை’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. சிக்கலுக்குத் தீர்வு காண இந்த உய்த்துணர்வைத் தவிர அவர்கட்கு வேறு வழி புலப்பட்டிலது. எதிர்மாறான வினைவுகட்குச் சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாத முன்னோர்கள் இப்படியாவது ஒரு காரணம் கண்டுபிடித்ததில் வியப்பில்லை. உலகியலில் நேருக்கு நேர் தீமைசெய்தவன் அரசால் கண்டுபிடிக்கப்பட்டு ஒறுக்கப்படுகிறான்-இது அரசநீதி! தீமையே செய்யாதவனும் சில நேரத்தில் துன்புறுகிறான்-இஃது ஊழ் வினைப் பயன்-என்பதாகத் கருதிய முன்னோர்கள்,"அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்”- என்னும் பழமொழியையும் உருவாக்கிவிட்டனர்.

ஊழ்வினை உண்மையா?

நடுநிலைமையுடன் பகுத்தறிவு கொண்டு அறிவியல் அடிப்படையில் ஆராயுங்கால் ஊழ்வினை என ஒன்று இருப்பதாக நம்புவதற்கில்லை. அந்த அந்தப் பிறவிகளில் செய்த வினைகளின் பயன்களை அந்த அந்தப் பிறவிகளிலேயே துய்க்கச் செய்வதுதான் கடவுளின் கடமை;