பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


அவதார வரலாறு:

மேற்கூறியவற்றின் பிழிவாக - பிழிவு தெளிந்த சாறாக நாம் எடுததுக் கொள்ள வேண்டியதாவது: கடவுள் மனிதர்களோடு தாமும் வாழ்ந்து அவர்களுக்காகத் தாமும் துன்பப்படுகிறார் என்பது நூற்றுக்கு நூறு பொய்க் கூற்று. அங்ஙனமெனில், இதில் உள்ள உண்மையாவது: மக்களுள் விரல்விட்டு எண்ணத்தக்க சிலர், மிகவும் உயர்ந்தவராக-சிறந்த மனிதத் தன்மையின் பேரெல்லைக் கோட்டில் நிற்பவராக - மாண உயர்ந்த மக்கட் பண்பாம் மலையின் கொடு முடியில் வீற்றிருப்பவராக அவ்வப்போது காணப்பட்டனர். இவர்கள் மற்ற மாந்தரைப் போல மனிதத் தாயின் வயிற்றில் மனிதராய்ப் பிறந்தும், மிகவும் உயர்ந்த பண்பாளராய்த் திகழ்ந்து, பிற உயிர்களின் நன்மைக்காக அரும்பாடுபட்டுப் பெரிய சாதனைகளாம் பணிகள் பல புரிந்து, மெழுகுவர்த்திபோல் தம்மையே அழித்துக் கொண்டனர்-அர்ப்பணித்து விட்டனர்.


இந்த மாபெருஞ் சாதனைப் பணிகள் மற்ற மாந்தர்களால் எளிதில் நிகழ்த்த முடியாதனவாய்த் தென்பட்டன. இந்த அருமைப்பாட்டைக் கண்ட சிலர், இந்தப் பெரியார்கள் மற்றவர்களைப் போல் மனிதராய் இருக்க முடியாது; கடவுளே இந்த மனிதப் பெரியார்களாகப் பிறந்து இவ்வளவு அரியபெரிய சாதனைகளைப் புரிந்திருக்க வேண்டும்- என்ற முடிவுக்கு வந்தனர்; எனவே, கடவுளே இந்தப் பெரியார்களாய் வந்து அவதரித்தார் என்று கற்பனை செய்தனர்; பின்னர் இந்தக் கற்பனையின் அடிப்படையில் பற்பல புளுகு மூட்டைக் கதைகளைக் கட்டிவிட்டனர். அவதார்த்தின் வரலாறு இதுதான்!