பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


பொருளாகும். இவ்வாறு ஒன்று நிகழ வேண்டிய நேரத் தில் வேறொன்று வந்து குறுக்கிட்டுத் தடுப்பதற்கு உள வியல் அறிஞர்கள் பின் செயல் தடை (Retroactive inhibition) எனப் பெயர் வழங்குவர்.


நினைவும் மறதியும்

ஈண்டு மறதி (Forgetfulness)என்பது ஒப்புநோக்கத்தக்கது. ஒன்றை நினைத் திருக்க வேண்டிய நேரத்தில், அதனைவிட்டு, வேறொன்றில் நினைப்பு இருப்பது தானே மறதி! எனவே, நினைவு மாற்றமே மறதி எனப்படும். நினைவும் மறதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் (Reciprocal) போன்றவை எனலாம். ஒன்றின்றி மற்றொன்றில்லை. ஒன்றை மறந்தால்தான் இன்னொன்றை நினைக்கலாம்-ஒன்றை நினைத்தால்தான் மற்றொன்றை மறக்கலாம். மரத்தால் செய்யப்பட்ட யானையை எடுத்துக்கொள்வோம். அதை மரம் என்று நினைக்கும்போது யானையை மறந்து விடுகிறோம் அதை யானை என்று நினைக்கும்போது மரத்தை மறந்து விடுகிறோம். இதைத் தான், திருமூலர் தமது திருமந்திர நூலில்,

“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை”

(எட்டாம் தந்திரம்-பராவத்தை-2290)

என்னும் பாடலில் மிகவும் நயமாகக் கூறியுள்ளார். ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்- நாயைக் கண்டால் கல்லைக் காணோம்'-என்று கூறும் முதுமொழி, கல்லால் ஆன நாயின் தொடர்பாக எழுந்ததே.