பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


யினையும் சுவைக்கத் தவறுவதில்லை. சுவை ஒருபுறம் இருக்க, இறக்கப் போகின்றவர் பிறப்பது எதற்கு? எல்லாரும் இன்பமாயிருக்கும்படி கடவுள் படைத்தால் என்ன?-என்ற மாதிரியான எண்ணங்கள் என் மனத்தை எப்போதும் வாட்டிக் கொண்டேயிருக்கும்.

துன்பமே வாழ்க்கை

மற்றும், எனக்கு மூளையில் கட்டி (Brain Tumour) ஏற்பட்டதால், அடிக்கடி நோயுற்றுத் தொல்லைப்படுவதுண்டு. அடிக்கடிச் சம்பள இழப்பு விடுமுறை எடுத்து வருந்துவதுண்டு. என்னைப் போன்ற இன்னும் பலரது நிலையையும் எண்ணிப் பார்ப்பதுண்டு. உலக மக்கள் படும் பல்வேறு இடுக்கண்களையும் நோக்குவதுண்டு. இதனால், உலக வாழ்க்கையில் துன்பமே மிகுதி-போலியான இன்பம் ஒரு சிறிது நேரம் இருந்து மறையக் கூடியது-என்ற கருத்து என் உள்ளத்தில் ஆழ்ந்தபதிவை உண்டாக்கியது.

போரும் பூசலும்

இம் மட்டுமா? மக்கள் தம் நலம் காரணமாக ஒருவரையொருவர் ஏய்த்து ஏப்பம் விடுவதும், தம் நலத்துக்காகக் கொள்ளையோடு நில்லாது கொலையும் புரிவதும், எல்லாத் துறைகளிலும் ஒழுங்கு இன்றிப் பல வகை ஊழல்கள் மலிந்து கிடப்பதும் என் உள்ளத்தை உறுத்திக் கொண்டுள்ளன. தம் நலம் காரணமாகத் தனி மாந்தர் ஒருவரோடொருவர் பூசல் புரிவது ஒரு புறம் இருக்க, உலக நாடுகள் ஒன்றோடொன்று பொருது கொண்டு, உலக மக்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் இழப்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பதும் என் உள்ளத்தை உலுக்கிக் கொண்டுள்ளன.