பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

களுள், யானே, பன்னிரண்டாவது கடைக்குட்டிப் பிள்ளை. எனது முப்பத்தைந்தாவது வயது காலத்துக்குள்ளேயே என் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் இழந்து வருந்தி, நிலையாமை உணர்வின் கொடும் பிடியில் சிக்கித் தவித்தேன். உலகியலில் நடை பெறும் எந்த இன்ப நிகழ்ச்சியைக் கண்டாலும் எனக்குத் துன்ப உணர்வே தோன்றத் தொடங்கியது. உலகில் பேரரசர், பெருந் துறவியர், பெருஞ்செல்வர், பேரறிஞர், பெரிய தத்துவ வாதிகள் முதலியோருள் எவர் வரலாற்றைப் படித்தாலும், இறுதியில் ‘காலமானார்’ என்று முடிவதைக் கண்டு யான் சிந்தனையில் ஆழ்ந்து போவது உண்டு. சாவுச் செய்தியைக் கேட்டாலும் பிண ஊர் வலத்தைக் கண்டாலும் பெரிதும் அதிர்ச்சி அடைவேன். அதிர்ச்சியின் காரணம் அச்சம் அன்று-நிலையாமை உணர்ச்சியே!

பிண ஊர்வலத்தின்போது முழக்கும் பறைக்கு 'நெய்தல்' பறை என்பது பெயர். பிண ஊர்வலத்துக்கு முன்னால் முழங்கிக் கொண்டு போகும் இந்த நெய்தல் ஒசை, உலகில் இறக்காமல் இன்னும் எஞ்சியிருப்பவர் கட்குச் சுடுகாடு என ஒன்றுள்ளது-வாழ்க்கையில் நேர்மையாய் இருங்கள்-என்று நினைவு செய்து நெஞ்சை நடுங்கச் செய்யுமாம். இதனைச் சாத்தனாரின் மணிமேகலை நூலிலுள்ள -

“எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறு உம் நெய்தல் ஓசை.”

(சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை : 70-71)-

என்னும் பாடல் பகுதியால் அறியலாம். இந்த நெய்தல் பறை என் நெஞ்சை நடுங்கச் செய்து என்னை நினைவில் ஆழ்த்துவது உண்டு.