ராஜம் கிருஷ்ணன்
11
இந்திரா கபேயில் ஒரு ஸ்வீட், காரம் காப்பி கிடைக்கும். வாங்கிவந்து மாமாவை உபசரிக்கலாம்.
ஆனால் அந்தக் கடையில் ஏற்கெனவே அவர்கள் கணக்கில் பதிநான்கு ரூபாய் கடன் நிற்கிறது. வீட்டில் இருப்பதைக் கொண்டு என்ன செய்யலாம்? அரைப்படி அரிசி, கடுகு, வெந்தயம், ஒரு புளிக்குழம்பு செய்யும் அற்பப் பொருள்கள். காயும் பருப்பும் சேர்ந்து நல்ல சமையல் செய்து நான்கு நாட்களாகின்றன.
இடை இடையே மாமா உள்ளே உட்கார்ந்திருக்கும் உணர்வு பளீர்பளீரென்று மின் அதிர்ச்சி கொடுப்பதுபோல் உறைக்க, அவள் பெரியசாலையை நோக்கி நடக்கிறாள்.
பெரிய சாலையில் பச்சைக்கண்ணாடிகளும் படாடோபமான திரைகளுமாக விளங்கும் ஓட்டல் இந்திராகபே தான், ஒரு பெரிய நகரை அடுத்த இரண்டுங்கெட்டான் ஊர்க் கடைவீதிக்கே உரித்தான மூன்றாந்தர ஓட்டல். அந்தப் பச்சையும் நீலமுமான திரைகள் தொங்கும் மாடியறையில் தான் அவர்கள் முதலிரவையும் பின்னும் சில இரவுகளையும் அனுபவித்தார்கள். பொழுது விடியாத, உறக்கம் தெளியாத, கனவு கலையாத மயக்கத்துக்கு அது சுவர்க்கத்து அனுபவமாக இருந்தது; பெரிய சாதனையைச் சாதித்த பெருமிதமாக இருந்தது; குன்றேறி நின்ற கர்வத்தை முகத்திலும் உடலிலும் பூசியது. இப்போது.
பிற்பகல், கெடுபிடியில்லாத நேரம். சருகு இலைகளில் சாப்பிடும் இரண்டு கிராமத்தார்களைத் தவிரக் கூட்டம் இல்லை. முன்சீப் கோர்ட்டுக்கு வந்த கும்பல் ஒன்று உரத்துப் பேசிக்கொண்டு தோசைக்காகக் காத்திருக்கிறது.
முதலாளி சிவந்த நிறமுடைய இளைஞன்தான். ஆனாலும் உட்கார்ந்து ஊட்டம் பெற்ற தொந்தியும் சிலும்பிக் கொண்டு நிற்கும் கிராப்பும், வெண்பட்டையில் பளிச்சிடும் குங்குமமும் பட்டாகச் சிவந்த வெற்றிலை உதடுகளும் வயசை நடுத்தரத்துக்குக் கொண்டு போயிருக்கின்றன. அவளும் அவனுமாக எதிர்ப்பட்டால் சிரித்து உபசாரம் செய்வான். இந்த ஓட்டல்காரன், தான் பிறந்த குலத்தில் பிறந்திருக்கிறான்