பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

புகழேந்தி நளன் கதை


"புத்திசாலித்தனம் அதற்குத் தேவைப்படும்” என்று சுட்டிக் காட்டினான் புட்கரன்.

“அதற்குப் பஞ்சமில்லை; இந்த நாட்டில் புத்திசாலிகள் எல்லாம் புவியில் உயர்வாக இல்லை; செல்வர்கள் எல்லாம் புத்திசாலிகள் இல்லை” என்று கூறினான். திரைப்பாடலின் எதிர்ஒலியாக அது இருந்தது.

“ஆடத் தெரியாது” என்று கூறினான்.

“நடிக்கத் தெரிந்தால் போதுமானது. பின் குரல் கொடுத்துப் பேச வைத்தால் அது நடிப்புக்கு உதவியாகும்; இன்று இரவல் குரல், இரவல் பாட்டு; எல்லாம் இரவல்தான்” என்று எடுத்துக் கூறினான்.

“நான் இருக்க பயமேன்?” என்று அபயம் தந்தான். “நீ காயை உருட்டு; அதுபோதும். அந்தச் சூது கருவி அதாவது ‘கவறு’ அது விழுவது என் கையில் உள்ளது. நான் அதன் வடிவில் புரள்வேன்; இது புரட்சி” என்றான்.

“தெய்வம் தமக்குத் துணை இருக்கிறது” என்பதால் அவன் அக் கூற்றுக்கு இசைந்தான்.

தேர்கொண்டு வந்து நிறுத்தினான். குதிரை ஒன்று கொண்டு வந்து பூட்டினான்.

“எதற்காக?”

“நிடத நாடு செல்ல” என்றான்.

“போருக்குச் செல்வது என்றால் தேரில் செல்ல வேண்டும். அந்த ஆண்மை அது நமக்கு இல்லை; அது நீ செய்த நன்மை; நீ எருதின்மேல் ஏறிச் செல்க” என்றான்.

அவ்வாறு கூறுவதே விளையாட்டாக இருந்தது. எருமை மீது சிறுவயதில் ஏறி ஊர்ந்து இருக்கிறான். அந்த நினைவு வந்தது.