பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

147



பெறவும் இயங்கவும் ஆன முழுமையான செயல் இயக்கத்தையே நாம் ஒருவனின் வாழ்க்கை என்கிறோம். எனவே வாழ்க்கை என்பது நீடிய செயல் அதில் நாம் செய்யும் குறுஞ்செயல்கள் என்பவையே, அப்பெருஞ் செயலும் பெருமைக்குரிய செயலும் ஆகிய வாழ்க்கையை நிறைவுடைதோக் நிறைந்த பயனுடையதாக ஆக்கிக் கொள்வதற்கு உதவுகின்றன. இவை நிற்க.

இனி நம் உடல் களைப்புறும்படி உழைப்பது என்றால் என்ன? உடலை அப்படியும் இப்படியுமாக ஆட்டி வருத்துவதா? இல்லை, அலைக்கழிப்பதா? இல்லவே இல்லை. உடலை அதன் உறுப்புகள் அனைத்தும் அசைவுறும்படி உழைப்பில், அல்லது செயலில் ஈடுபடுத்துவது. உடலில் அகத்தும் புறத்தும் உள்ள உறுப்புகள் அசைவுறும்படி அஃதாவது இயக்கம் கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உடல் நலத்துடன் இருக்கும். இல்லையானால் இயக்கம் குன்றி நோய்ப்பட்டு, இவர் என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று உடலும், உயிரும் தம் தம் இயக்கங்களை நிறுத்திக் கொள்ளும்.

உடலை இயங்க வைப்பதே உழைப்பு உழைப்பு இல்லையானால், உடல் இயங்க வழியில்லை. உடல் இயங்காமல் போனால், அது நலம் குன்றும், நலம் குன்றுவது நலிவை உண்டாக்கும், நலிவு நோயை வருவிக்கும்; நோயுற்ற உடலில் உயிர் குடியிருக்க விரும்பாமல் வெளியேறிவிடும். பழுதாய்ப் போன வீட்டிலிருந்து நாம் வெளியேறி வேறு வீட்டிற்குக் குடிபோக விரும்புகிறோம். இல்லையா? அப்படித்தான். உயிரும் நன்றாக உள்ள உடலிலேயே குடியிருக்க விரும்பும். உயிரின் இயக்கமே உடலொடு பொருந்தித்தான் இருக்கும். உயிர் இயங்குவதற்கு உடல் தடையாக இருக்கக் கூடாது அன்றோ? அதனாலேயே உடல், உயிர் இயக்கத்துடன் ஒத்துழைப்பதற்கு நல்ல நிலையில் இருந்தாக வேண்டும். அதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

உடல் உழைப்பு என்பது உறுப்புகளை நன்றாக இயக்கிக் களைப்படையும்படி செய்கிறது. உறுப்புகள் உழைக்க உழைக்க நாம் உண்ட உணவு ஆற்றலாக மாறுவதும், பின்னர் அது செலவாகிப் போவதும், எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதுபற்றி முன்னரே நன்கு விளக்கமாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

எனவே, உடல் நலமாக இருக்க உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்கும்படி நாம் உழைத்தாகவேண்டும். இவ்வுலகில் பல பேர் நன்கு உடலை வருத்தி உழைக்கிறார்கள். சிலர் உடல் வருத்தாமல் உடலை நோயுறும்படி செய்து கொள்கிறார்கள்.

உடல் உழைப்பு பலவகையானது. உழைப்பு பயன் கருதியே