பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

115



பள்ளிக்கூடம் தொடங்கி யிருப்பார்கள். இவ்வாறு நம்மில் நிறைய பேர்கள் நிலையான முயற்சியில்லாமல் இருப்பதைக் காணலாம். இம்முறைகள் அனைத்துமே சரியென்றோ தவறென்றோ சொல்ல முடியாவிட்டாலும், நம் அறிவுக்கும் திறனுக்கும், கைப்பொருளுக்கும், சூழலுக்கும் ஏற்ற ஒரு செயலை, முன்பே நன்கு எண்ணி, ஏற்றுக் கொண்டால், அதிலேயே முழு முயற்சியுடனும், தொய்வில்லாமலும், தாழ்வுறாமலும் ஈடுபட்டு வெற்றி காண முடியும். ஆழ எண்ணிப் பாராமல் ஒரு முயற்சியில் திடுமென ஈடுபடுபவர்கள்தாம் அடிக்கடி தம் ஈடுபாட்டை எளிதாக மாற்றிவிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். செயல்நிலையில் இந்த நடைமுறை மிகமிகத் தவறானதும், பயன்தராததும், சிறுசிறு இழப்புகளை உண்டாக்கக் கூடியதுமாகும்.

9. பணம் மட்டுமே போதாது

ஒரு செயலில் ஈடுபடும்போது, ஒரு சிறு தொகையை அதற்காகச் செலவிட வேண்டிவரும். பின் அதிலிருந்து வேறு செயலுக்கு மாறும்பொழுது, முன்னர் ஈடுபடுத்திய சிறு தொகையும் அவ்வகையில் செலவான காலமும் வீணாகப் போகின்றன. எனவே, ஒரு செயலில் இறங்கும்பொழுதே நமக்கு அச்செயல் ஏற்றதுதானா, நம் அறிவுக்குப் பொருந்தியதா, அல்லது அந்தச் செயலுக்கு நாம் ஏற்றவரா, அதற்குரிய அறிவு நமக்கு இருக்கிறதா, என்றபடியெல்லாம் நாம் எண்ணிப் பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஒன்றுமே எண்ணிப் பாராமல் திடுமென நாம் எந்தச் செயலிலும் பணம் உள்ளதென்றோ, போதுமான துணை உள்ளதென்றோ உடனே ஈடுபட்டுவிடக் கூடாது. எந்த அளவு பணமிருந்தாலும், துணையிருந்தாலும் நமக்கு அச்செயலைப் பற்றிய அறிவு கொஞ்சமேனும் இருத்தல் வேண்டும். நீந்தத் தெரிந்தவன் உதவியுடன் நாம் ஓர் ஆற்றைக் கடப்பதாக வைத்துக் கொள்வோம். தவிர்க்கவே முடியாத நிலையில் நாம் ஒருமுறை இருமுறை அப்படிப் போகலாம். ஆனால் அப்படி ஆற்றைக் கடந்து கடந்து போய்த்தான் ஒரு வேலையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று வந்தால் கட்டாயம் நாம் நீந்தத் தெரிந்து கொண்டுதான் அதில் ஈடுபட வேண்டும். இல்லெனில் என்றைக்கோ ஒரு நாள் நாம் ஆற்றில் முழுகி உயிரையே இழந்து போகும்படி ஆகிவிடும்.

10. பின்னர் வருந்தும்படி செய்யற்க

ஆனாலும் சில நேரங்களில் வேறு வழியில்லாமல் நாம் முன் பின் எண்ணிப் பாராமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டிய கட்டாயச்