பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

47


பார்ட்டின்னா பார்ட்டிதா... ப்யூட்டின்னா ப்யூட்டிதா..

சோடா குப்பி மூடியைத் திறந்தாற் போல் செவந்தி பொங்கிச் சீறுகிறாள். “அந்த எளவ மூடுடி! பாட்டா அது? கரண்ட் இல்லியே? இப்ப அதுக்கு மட்டும் கரண்ட் எப்படி வந்திச்சி?”

“ம் வந்திச்சி.. பன்னண்டு ரூவிக்கி பாட்டரி வாங்கிப் போட்டிருக்கு!” என்று கணவன் தெரிவிக்கிறான்.

“நீங்க குடுக்கிற எடந்தா இவள் துள்ளுறாள். இதுக்கெல்லாம் காசு குடுக்கறிங்க...”

“அட இதெல்லாம் கேக்குற வயசு. இதுக்கெல்லாம் பிள்ளைங்களக் கசக்கப்பண்ணக் கூடாது. நீயும் கேளேன். சமையல் ரூமில கொண்டு வச்சிட்டு!”

மனசைப் போட்டுப் பிராண்டிக் கொள்ளவேண்டும் போல் ஒரு நமைச்சல். செவந்தி மாட்டுக் கொட்டிலின் பக்கம் போகிறாள். இவள் ஓசை கேட்டதுமே பசு குரல் கொடுக்கிறது. முதல் ஈற்றுக் கன்று கிடாரி. பெரிதாக வளர்ந்தது. உழவு மாடுகள்...

கொல்லைப்படலைத் தள்ளி வைக்கிறாள். மழை நின்று வானில் இரண்டொரு நட்சத்திரங்கள் கூடத் தெரிகின்றன.

எங்கிருந்தோ காற்றில் ஒர் வாடை இழைந்து வருகிறது. புரியவில்லை. பின் பக்கம் வயல்களுக்கும் கொல்லைக்கும் இடையே குப்பை மேடுகள். முள் காத்தான் செடிகள் என்று ஒழுங்கற்ற இடம். இவர்கள் வீட்டை அடுத்து நாகு வீட்டுக்காரர் குடியிருந்த வீடு இடிந்து கிடக்கிறது. அவர்கள். ஊரைவிட்டுப் பெயர்ந்து பல வருடங்கள் ஆகின்றன. அந்த வீட்டைச் செப்பனிட்டுக் கொண்டு வாத்தியார் பரமசிவம் வந்தார். நாலே மாசத்தில் மஞ்சட் காமாலை வந்து செத்துப் போனார். அது இடிந்து குட்டிச் சுவராகக் கிடக்கிறது. பிறகு சிறிது தூரம் முட்செடிகள்... பொதுச் சாவடி. மேலத் தெரு அங்கிருந்து தொடங்கும்.

குட்டிச் சுவருக்குப் பின் சாராய வாடை வந்ததாக நீலவேனி சொன்னாள். ஊர்ப் பஞ்சாயத்தில் தண்ணீர் பங்கு,