பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

13


சமையலறையில் அடுப்புச் சாம்பலை வாரி, மெழுகுகிறாள். சாமான்கள் கிணற்றடி ஓரம் துலக்கச் சேருகின்றன.

அம்மா நலிந்த குரலில் தன்னைக் காட்டுகிறாள்.

“இன்னும் பொழுது விடியல. அப்பா ராமுச்சூடும் தூங்கல கறட்டுக் கறட்டுன்னு இழுப்பு; இருமல். இப்பத்தா செத்தக் கண்ண மூடுனாரு. நீ அதுக்குள்ளாற எந்திரிச்சி லொடபுடங்கற...”

செவந்திக்குக் குற்ற உணர்வு குத்துகிறது.

“இன்னக்கி, நடவுன்னு நேத்தே சொன்னதுதான். அப்பாவுக்கு ஒண்ணில்ல. டாக்டர் குடுத்த மாத்திரய ஒழுங்கா சாப்புடறதில்லை. எத்த சாப்புடக் கூடாதோ, அத்த ஊத்திக்கிறாரு...” என்று முணுமுணுத்தவளாய் அப்பனுக்கு அருகில் வந்து நிற்கிறாள். அவர் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருக்கிறார்.

முகம்தான் எப்படி வெளுத்துப் போயிற்று? கழுத்து, மார்புச் சதை பைபையாகத் தொங்குகிறது. முன்முடி வழுக்கையாகிப் பனங்காய் வாடினாற் போல் இருக்கிறது. கண்கள் செருகி, விழி பிதுங்க ஓர் இருமல் தொடர் உலுக்குகிறது.

கட்டிலுக்கடியில் வட்டையில் சாம்பல் போட்டு வைத்திருக்கிறார்கள். செவந்தி அதை எடுத்து அவர் முன் நீட்டுகிறாள். கோழை என்று நிறைய வரவில்லை. அவஸ்தைதான் பெரிதாக இருக்கிறது.

முதல் நாளைக்கு முதல் நாள்தான், பெரிய சாலையில் நிலவள வங்கியின் வாசலில் அப்பன் உற்சாகமாக உட்கார்ந்திருந்தார். நிலத்தின் உரிமையாளர் அவர். அவர் மண்ணில்தான் அவள் கால் காணியை, புதிய முறையில் பயிர் வைக்கப் போகிறாள்.

ஏறக்குறைய ஐந்து ஏக்கரா நிலமிருந்தும், அடமானத்திலும், கடனிலும் பயிர் வைக்க ஆள் கட்டில்லாமலும்,