பக்கம்:உத்தரகாண்டம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    315


“காபி ஸார்!” என்று வந்த காவலன் பிளாஸ்கைத் திறந்து கிளாசில் ஊற்றி வைக்கிறான்.

“அந்தப் பெரிம்மாக்குக் குடு!” என்றவன், கன்னியம்மாளைக் கூப்பிடுகிறான். “நீ வாம்மா, எங் கூட?” என்று அழைக்கிறான். அவள் எதுவும் கேட்காமல போகிறாள்.

அடபாவி, இட்டிலி காபி வாங்கிட்டுவான்னு நூறு ரூபாத்தாளக் குடுத்திட்டு, அவள மட்டும் எங்கே கூட்டிட்டுப் போறான்? அவள் பதைபதைப்புடன் எழுந்திருக்கிறாள்.

“ஏ கெளவி, உக்காரு! உனக்குத்தா காப்பி. குட்சிக்க!”

“ஐயா எம்பேத்தி அவ. அவள எதுக்கு எங்க கூட்டிட்டுப் போறாரு, உங்க எஸ்.ஐ.? அவள் காபியையும் வெள்ளைச் சீலையையும் மறந்து வெளியே விரைகிறாள்.

ஆனால் அந்தக் காவலன் இவளைப் பற்றிக்கொண்டு வந்து உட்கார்த்துகிறான். “இப்படிக் குந்துங்க. பெஞ்சி போட்டிருக்கில்ல? உங்க பேத்திக்கு ஒண்ணும் ஆவாது; பயப்படாதிய.”

“ஒண்ணும் ஆவாதா? என்னிய இங்க உக்காத்தி வச்சிட்டு...”

மேலே பேசச் சொற்கள் வரவில்லை.

நிலை கொள்ளவில்லை. பார்த்தால் நல்லபிள்ளை மாதிரி இருந்தானே? பாவி? பிணந்தின்னிக் கழுகு கூடப் பார்க்க அழகாகத்தான் இருக்குமோ? அவளுக்குத் துணை நான், எனக்குத் துணை அவள்ன்னு வந்தமே? அழகாயி, இது உனக்கே நல்லாயிருக்கா? நீ இங்க தெய்வமா இல்லியா? ஊரே சூனியம் புடிச்சாப்புல இருக்கு. பஸ்ஸில என்னமோ வெட்டிப் போட்டா, குத்திப் போட்டான்னானுவ...

உடம்பே துடிக்கிறது. அந்தப் பாவத்தில் இருந்து இந்தப் பாவத்துக்கா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/317&oldid=1050447" இலிருந்து மீள்விக்கப்பட்டது