பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

புகழேந்தி நளன் கதை


என்று காத்திருந்தான். தெய்வக் குற்றம் ஏதாவது செய்வான் என்று காத்திருந்தான். நீதி வழுவுவான் என்று எதிர் பார்த்தான்.

செங்கோன்மை தவறவில்லை; நேர்மை குறையவில்லை; இமயம் போல் உயர்ந்து விளங்கியது அவன் வாழ்வு. காத்திருந்தான் கடன்காரன் அவன் உடைமையைக் கவர.

நாளும் தெய்வச் சடங்கு இயற்றுபவன் நளன். அந்திப் பொழுது வந்ததும் இறைவணக்கம் செய்து வந்தான். கால் கழுவிப் பின் இறைவணக்கம் செய்வது வழக்கம்.

அவசரப்பட்டான்; சிறு தவறு; காலில் சிறுமறு; மாசு அகலவில்லை; தூசு ஒட்டிக் கொண்டிருந்தது. சடங்கில் அவன் இடர் உற்றான்; நியமத்தில் நிந்தை ஏற்பட்டு விட்டது. இனி அது வாய்க்கால் வழி ஆகக் கலியனுக்கு அமைந்தது. பற்றுவதற்கு அது பற்றுக் கோடு ஆகியது.

அவனைக் கெடுப்பதற்கு அது ஆரம்ப நிகழ்வாக அமைந்தது. விழா எடுக்க அது தோற்றுவாயாக அமைந்தது. கால்கோள் விழாவாக அதனைக் கலியன் கொண்டான்.

கெடுப்பது என்று மனம் கொண்டு அடுத்துக் கெடுக்க முனைந்தான். திண்ணிய அவன் மனத்தை நெகிழச் செய்தான். எதிலும் எந்தத் தவறும் செய்யாதவன் தொடர்ந்து தவறுகள் செய்யத் தூண்டினான். தளர்ச்சி அவன் செயற்பாட்டில் உண்டாக்கினான். விழிப்பு உணர்வை அவன் வழி அடைத்தான். அயர்ந்தான் என்று கூறவேண்டி உள்ளது.

கலி அவனைத் தொடர்ந்தான். இறைவன் வழிபடாதவரைத் துயர்கள் வந்து அடைவதைப் போலக் கலி அவனை அடைந்தான்.