பக்கம்:உத்தரகாண்டம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296   ✲   உத்தரகாண்டம்

தோட்டம் அவன் உழைப்பு; படைப்பு. தாயம்மா, இத்தனை மரங்களும், அவன்பேர் சொல்லும் குழந்தைகள் என்பார். அவள் பொட்டை அழிக்கவில்லை. இகழவில்லை; வண்ணச்சேலையை உரிந்து வெள்ளை வழங்கவில்லை. துணையை இழந்தவளுக்குக் குழந்தைகள்தாம் ஆதரவு என்று வலியுறுத்தினார்கள்.

இப்போதே, அவள் பிடித்துவைத்த களிமண்ணாக அமர்ந்திருக்கையில் பேர் பேராக வந்து, யார் யாரோ முக மறியாதவர்களெல்லாம் வந்து அடித்துக் கொண்டு அழுகிறார்கள்.

“இத்தை எதுக்குடி மரகதம் கூட்டியாந்தே?... கொள்ளி... கொள்ளி... கோட்டான், கழுவு போல உக்காந்திருக்கு. அப்பலேவுடியா ஆசுபத்திரிக்குக் கொண்டுட்டுப் போனப்பகூட மவராசன் புழச்சி வந்து, எல்லாரையும் பாத்து விசாரிச்சாரு. அத்தினி பேருக்கும் சீல துணி வாங்கிக் குடுத்தாங்க. இது கரிக்கால வச்சதும், ஒண்ணுமே இல்லாம சிரிச்சிட்டுப் பறந்து போன ஆளு, திடீர்னு மார்வலிக்கிதுன்னு சொன்னவரு ஆசுபத்திரிக்கு இட்டுப் போகுமுன்ன உசிருபோகுமா? பாவி, பாவி, மூதேவி, சண்டாளி, முதல்ல நீ செத்துத் தொலையக் கூடாதா? முழிச்சிக்கிட்டுப் பாக்குது பாரு? பெத்தபையங்கிட்டக் கொள்ளி வாங்கிட்டுப் போவணும்னு இருக்காதா? புருசனை முழுங்கினா. பெத்த பொண்ணு, மருமவன், அல்லாரையும் வாயில போட்டுக்கிட்டா. ஒண்டின எடத்திலண்ணாலும் ஆரவுட்டா?... பிசாசு... துக்கரி...”

செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி மாரடிக்கிறார்கள். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

கண்கள் எரிகின்றன-

‘முருகா! என் மீது உனக்குக் கருணை இல்லையா? ஏனிப்படி வாட்டி வதைக்கிறாய்?’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/298&oldid=1050403" இலிருந்து மீள்விக்கப்பட்டது