பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 58 –

கணந்துள் எனும் பறவை பாலைநிலத்தில் செல்லும் வழிப்போவோருக்குத் தன் குரலினால் ஆறலைக் கள்வர் உண்மையினை அறிவுறுத்தும் என ஒரு தமிழ்ப் பாடல் கூறுகின்றது. கெளதாரி எனும் பறவை இன்று கதுவாளி என வழங்கப்படுகின்றது. விரைந்து கடந்து செல்லும் ஆற்றல் உடைய இதனை மக்கள் வளர்த்துப் போர் செய்யப் பழக்குவர். ஒன்றோடொன்று போர் செய்யுங் கால்காலில் வாள் கட்டி விடுவர். பொழுது போக்கிற்காக நிகழ்த்தப்பட்ட இவ்விளையாட்டு, தமிழ் நாட்டில் பண்டுதொட்டு நடந்துவந்தது என்பதைப் பின்வரும் பத்துப்பாட்டு வரியால் அறியலாம்.

"மேழகத் தகரொடு சிவல் விளையாட".

நீர்வாழ் பறவைகளுள் ஒன்றான கொக்கு வெள்ளைக் கொக்கு, சாம்பற் கொக்கு என இருவகைப்படும். சாம்பற் கொக்கினை, ஒருசிலர் குருட்டுக் கொக்கெனக் கூறுவதும் உண்டு. மீன், தவளை முதலியவற்றைக் காத்திருந்து வேளை வந்ததும் கொத்தித் தின்னும் திறனை உடையது. இத்திறனையே வள்ளுவப் பெருந்தகை,

"கொக்கொக்க கூம்பும் பருவத்து ”

எனக் குறிப்பிடுகின்றார்.

பலநிறப் பூக்கள் மணலில் வீழ்ந்து கிடப்பது போலப் பலநிறச் சிறகுகளைப் பெற்ற மீன்கொத்தி ஓர் அழகிய பறவையாகும். இதனை மணிச்சிரல் என்றும் அழைப்பர். இதனது வாய் செம்முல்லைப் பூவை ஒத்திருக்கும். இதனது வாழ்க்கை வரலாற்றை இதனது பெயரிலிருந்தே நாம் எளிதில் தெரிந்து கொள்ளலாம். சங்கப் புலவர்களில் ஒருவரான சாத்தனர். இதனது திறனை,