பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
– 30 –

கருத்தாலும் புள்ளினம் பேரொலி செய்து ஆரவாரிக்கும். பறவைகளில் பல ஆலமரம், புன்னை மரம், மருத மரம் இவற்றிலேயே கூடுகட்டி வாழும். பறவைகளுக்கு மீன் சிறந்ததொரு உணவுப் பொருளாகும். முற்றங்களில் உலர்த்தப்பட்டிருக்கும் மீன்களைப் புட்கள் கவர்ந்து சென்று உண்ணும்.

பாவலரும் பறவைகளும்

மனிதனுக்குள் பறவை போல்வர் கலைஞனும் புலவனும். டார்வின் கொள்கைப்படி விலங்குகளிலும் பறவைப் பண்புடையன உண்டு. பறவை உடலோடு பறக்கும், மனிதன் உடல்விட்டுப் பறப்பான். சிட்டுக் குருவி, பருந்து இவை இரண்டும் பறப்பதில் வேற்றுமை இருத்தல்போல மனிதன், புலவன் இவர்களிடையே வேற்றுமை உண்டு. புலவன் கற்பனைச் சிறகின் துணை கொண்டு வான முகடடையும் தாண்டிச் செல்லும் ஆற்றல் பெற்றவன். இருந்த இடத்தில் இருந்து கொண்டே காடு, மலை, நாடு, வான முகடு இவற்றிற்கெல்லாம் சென்று திரும்பிவிடுவான்.

தமிழ்ப் புலவர்களும் பறவைகளும் என்பது குறித்து எண்ணுதற்கு முன்னால், ஆங்கிலப் புலவர்கள் பறவைகளைப் பற்றி எவ்வாறு பாடியுள்ளனர் என்பது குறித்து ஒரு சிறிது காண்போம். 'நைட்டிங் கேல்,' 'ஸ்கைலார்க்' என்ற இரண்டு பறவைகளுமே ஆங்கிலப் பாடல்களில் பெரிதும் பேசப்படுகின்றன. ஆங்கிலப் புலவர்கள் பறவைகளைப் பற்றிப் பாடியிருக்கும் பாக்களை நாம் படிக்கும் நேரத்தில் அவர்கள் பறவைகளைப் பார்த்து ஏதோ பொறாமை உணர்ச்சியுடன் வியந்து பாராட்டியுள்ளனர் என்ற எண்ணம் நமக்கு எழுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக கீட்சு என்னும் புலவர் எழுதிய 'நைட்டிங் கேல்'