பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51

மித நடையாம். இந்நிலையில், உரைநடை அழகு என்றால் என்ன? உரைநடைக்கு அழகு அளிப்பது எது? என்பதற்குத் தீர்வு காணவேண்டும்.

உரைநடை அழகு கண்ணால் கண்டு மகிழக் கூடியது அன்று ஒலியுறுப்புகளால் வாய்விட்டுப் படித்துச் சுவைக்கக் கூடியது; காதால் கேட்டுச் சுவைக்கக் கூடியது. ஒலி எழுப்பாமல் வாய்க்குள் படித்தும் நுணுக்கமாக மனக்கண்ணால் கண்டும் சுவைக்கலாம். இவ்வாறு உரைநடையைச் சுவைக்க உதவும் கூறுகள் யாவை?

அழகுக் கூறுகள்:

உரைநடையில் உணர்த்தப்படும் கருத்தும் சிறந்ததாய் இருக்க வேண்டும்; உரைநடையில் அமைந்துள்ள சொற்களும் சொற்றொடர்களும் ‘இழும்’ என்னும் விழுமிய ஒலியுடையனவாய்ச் செவிக்கு இனிமை பயக்கவேண்டும். அதாவது, உரைநடையைப் படித்தால் ஒலிநயம்-ரிதம்(Rhythm) இருக்க வேண்டும். செய்யுளில் ஒலி நயம் இருப்பது போலவே, சிறந்த ஆசிரியர்களின் உரைநடையிலும் ஒலிநயம் இருக்கும். எடுத்துக்காட்டாக, இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் இடையிடையே உள்ள உரை நடைப் பகுதியைக் குறிப்பிடலாம். ஒலி நயம் உடைய உரைநடைப் பகுதி ‘உரைநடைப் பாட்டு’ என்று கூறப்படுவதும் உண்டு.

தமிழ் உரைநடையின் தொன்மை:

தொல்காப்பியக் காலத்துக்கு முன்பே தமிழில் உரை நடை நூல்கள் இருந்தன. தொல்காப்பியத்தில் நான்கு வகையான உரைநடை நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாளடைவில் செய்யுள் நடையின் சிறப்பு பெருகப்