பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17


          "பந்தினை இளையவர் பயிலிடம் மயிலுரர்
          கந்தனை யனையவர் கலைதெரி கழகம்
          சந்தன வண்மல சண்பக வனமாம்
          நந்தன வனமல நறைவிரி புறவம்"

என்னும் (48) பாடலில் கழகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மயிலை ஊர்தியாகக் கொண்ட முருகக் கடவுளைப் போன்ற இளைஞர்கள் கலை பயில்கின்ற கழகம் அந்நாட்டில் உள்ளதாகக் கம்பர் கூறுகிறார். கலை பயிலும் இடம்கலை ஆராயும் இடம் கழகம்’ என்பது கம்பர் கருத்தாகத் தெரிகிறது. திருவள்ளுவரோ, சூது ஆடும் இடம் கழகம் எனக் கூறியுள்ளார். திருக்குறளில் ‘சூது’ என்னும் பகுதியில்,

          ‘கவறும் கழகமும் கையும் தருக்கி
          இவறியார் இல்லாகி யார்.’ (935)

          ‘பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
          கழகத்துக் காலை புகின்.” (937)

என்னும் இரண்டு குறள்கள் உள்ளன. கழகமும் கையும் சூதாடு கருவியுமாக இருப்பவர் ஒன்றும் இல்லாத ஏழையராவர்; கழகத்தில் புகுந்தவர் பழகிய செல்வமும் பண்பும் கெடுவர்-என்பன மேலுள்ள குறட் கருத்துக்கள்.

கலை பயிலும் இடம் கழகம் எனக் கம்பர் கருத்துத் தெரிவித்திருக்க, அவருக்கும் பல நூற்றாண்டுகள் முற்பட்ட வராகிய திருவள்ளுவர் சூதாடும் இடம் கழகம் எனச் சொல்லியிருப்பதிலுள்ள உண்மை யாது? அஃது ஆராய்தற் குரியது:

சங்க இலக்கிய ஆட்சி

திருக்குறளைப் போலவே சங்க காலத்தைச் சார்ந்த இலக்கியங்களில் கழகம் என்னும் சொல் ‘சூதாடு களம்