பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கோடுகளும் கோலங்களும்

செவந்தி வாசலுக்கு வருகிறாள். “உள்ளே வந்து உக்காராம, வெளியே உக்காந்துட்டீங்க! இன்னிக்கு தீபம். சாமி கும்புடுகிற நாள்...”

“ஒ, நாங்க வந்து தொந்தரவு குடுக்கிறமோ?” என்று பெரிய மேடம் சிரிக்கிறார்.

"அய்யோ அப்படி இல்ல. எனக்குச் சாமியே நேரில வந்தாப்பல இருக்கு. பயிரு நீங்க சொன்னபடி வச்சேங்க. நாத்து விடுறப்ப மண் பரிசோதனை, விதைத் தேர்வுதான் செய்யல. ஆனா, அஸோஸ்பைரில்லம் குழி போல தண்ணிய கரச்சி, நாத்து முடிய அரை மணி வச்சோம். நிலத்தில தொழு உரம், சாணி உரம் கலந்து போட்டோம். தழைச்சத்து, சாம்பல் சத்து, மணிச்சத்து, எல்லாம் நீங்க படிச்சிக் குடுத்தாப்புல நோட்ட வச்சிப் பாத்திட்டு வச்சோம். பூடாக்ளோர்... களைக் கொல்லி மணலில் கலந்து கையில் உரை போட்டுக்கிட்டு விசிறினேன். களையே இல்லம்மா. பதினஞ்சி, இருபத்தஞ்சு, முப்பத்தஞ்சு, அம்பதுன்னு உரம் போட்டோம். முதல்ல ரெண்டு வாட்டி வேப்பம் புண்ணாக்கு கலந்து வச்சே... நீங்க வந்து பாருங்க...” இதற்குள் சரவணன் சொல்லி வேணி வீட்டில் இருந்து செம்பில் காபியுடன் வருகிறாள்.

"காபி குடியுங்கம்மா... ஸார், காபி குடியுங்க...” -

சிறு தம்ளர்களில் ஊற்றி வைக்கிறாள்.

“இப்ப எதுக்கம்மா காபி எல்லாம்? எவ்வளவு வச்சிருக்கே...?” வளர்மதி அம்மா, பத்மாவதி அம்மா, பெரிய மேடம், விரிவாக்க ஆபீசர்...

முதன் முதலில் இவர்கள்தாம் வீடுதேடி வந்தார்கள்.

வந்தவர்களை வாருங்கள் என்று அழைக்கவில்லை. செவந்தி உள்ளே சென்று மறைந்தாள்.

“நீங்கல்லாம் பயிர் வேலை செய்யிறவங்கதானே?” என்று பெரிய மேடம் என்று இப்போது அறியப்படும் அம்மாள் கேட்டார்.