பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கோடுகளும் கோலங்களும்

“ஏக்கா அவருதாம் வூட்டுக்காரரா? போட்டோக் கடையில் பாத்திருக்கிற. எங்க பெரிம்மா பொண்ணு மல்லிகா போன வருசம் பூ முடிச்சிட்டு இவரு கடயிலதா போட்டோ எடுத்தாங்க... பாத்தா காலனி ஆளுங்கன்னு சொல்ல முடியுமா? எல்லாம் ரொம்ப மதிப்பாயிட்டாக. அவுங்களுக்கு சர்க்கார் வூடு பட்டா குடுத்திருக்கு. குழாபோட்டு குடுத்திருக்காங்க...”

இவள் எதோ மனசில் எந்த வேற்றுமையும் இல்லாமல்தான் இதைச் சொல்கிறாள் என்பதைச் செவந்தி அறிவாள். ஆனால் அம்மா, இதை விசுக்கென்று பற்றிக் கொள்கிறாள்.

“ஏண்டி வந்தவங்க காலனி ஆளுங்களா?”

“ஆமா அதனால என்ன? அவங்களும் நம்மப்போலதா. இந்த மாதிரி எல்லாம் பேசுறது தப்பு” என்று செவந்தி கோடு கிழிக்கிறாள்.

“அவதா எவ்வளவு ஒத்தாசைபண்ணுனா! நல்லாபடிச்சவ. ஆனா கொஞ்சம் கூடக் கருவம் இல்ல. ஒராள் வேலை பண்ணுனா அன்னிக்கு. இப்ப நாம் போயி உதவாட்டி அது மனிச சன்மத்துக்கு அழகில்ல".

“ஏ வாய அடிச்சிருவீங்க இந்தூட்டுல” மூசுமூசென்று அழத்தொடங்குகிறாள்.

ரங்கனும் வரும்போது சந்தோசமாக இல்லை.

“சோறு வையி. எனக்கு ஒரே பசி. சாமி இங்க உக்காந்து சாப்புடும் எல்லாரும் சாப்பிடுவோம்னு பாத்தா, தூக்கெடுத்து வசூல் பண்ணிட்டுப் போவுது சீ. நம்ம கோயில் சாமி, நிசமாலும் சாமி” என்று அலுத்துக் கொள்கிறான்.

சுந்தரிதான் அவனுக்கு இலை போடுகிறாள்.

“நீங்கல்லாம் சாப்பிட்டிங்களா?”

“ஆமா, எனக்குப் பசிபிச்சிட்டுப் போச்சி! காலமேந்து நிக்க நேரமில்லாம எல்லாம் செஞ்சி, ஆற அமர உக்காந்து சோறு தின்னக்கூடக் குடுத்து வய்க்கல. இந்தச் சாமி எங்கேந்து வந்திருச்சி இப்ப?”