பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

101

வைத்துப் புத்தரிசியைப் போட்டு, வீட்டுச் சாமியை நினைத்துப் பொங்கல் வைத்தாளே. அண்ணி, அண்ணன் வந்தார்களா? பெரும் பொங்கல். முன் வாசலில் வைத்து இவள்தான் விரதமிருந்து கும்பிட்டாள். “எங்களுக்கு இதெல்லாம் வழக்கமில்ல. தப்பா நினைச்சிக்காத செவந்தி. திவ்யாவுக்கு பிரைமரி காம்ப்ளக்ஸ்னு மருந்து குடுக்கிறோம். நேரத்துக்கு அதுக்கு பாலு, முட்டைன்னு குடுக்கணும். பொங்கல் வீட்டுக்கு வராமலிருக்கக் கூடாதுன்னு வந்தோம்...” என்றாள். ஒப்புக்கு நின்றாள்.

ரங்கன் குழந்தைகளுக்குப் புதுத்துணி வாங்கி வந்தான். மாப்பிள்ளைக்கும் வேட்டி துண்டு வாங்கி வந்தான். முன்வாசலில் மாலையோடு பொங்கல் வைத்துக் கும்பிட்ட போது, ஏதோ சிறைக் கைதி போல் தோன்றியது. தான்வாங்கி வந்த வாயில் சேலையை அண்ணிக்குக் கொடுக்கலாமா என்று தோன்றியது. பிறகு, அவள் அதைத் தொடக்கூட மாட்டாளோ என்றும் தயங்கிக் கொடுக்கவில்லை. சரோவும் சரவணனும் தான் பொங்கலை ரசித்து அனுபவித்தார்கள். சரோ வாசலில் பெரிய பெரிய கோலம் போட்டாள். கலர் பொடி வாங்கி வந்து தூவினாள்.

பொங்கல் பானை, கரும்பு, மஞ்சட் கொத்து என்று கோலம்...

"மாமா, எபபடி?"

“நல்லா போட்டிருக்கே. உங்கம்மாவுக்கு இந்த மாதிரி ஃபைன்ஆர்ட் வராது. காட்டு மேட்டு வேலதான் செய்வாள்...”

“எனக்குப் பெயின்டிங் பண்ணக்கூட ஆசை. டென்த் முடிச்சப்புறம் என்ன கோர்ஸ் எடுக்கலாம் மாமா?”

“மேல படிக்கப் போறியா? உன்ன உங்கம்மா இப்பவே புருசன் வீட்டுக்கு மூட்டைக்கட்ட ரெடியா வச்சிருப்பாளே?”

"நோ.. அதெல்லாம் நடக்காது. நா பி.இ. படிக்கணும். குறைஞ்ச பட்சம் பாலிடெக்னிக்ல படிச்சிட்டேனும் டிகிரி எடுப்பேன்! மாமா, ரேங்க் வாங்கிட்டா மேல் படிப்புக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்குமில்ல?”