பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

137

ஒரு பெரிய மலையேறி நிற்பதுபோல் அழகாக உழுமுனை பதிந்து நடவு முடித்த நிலத்தைச் செவந்தி பார்க்கிறாள்.

இதற்கு முன் மணிலாப் பயிர் அவள் செய்ததில்லை. நெல் நாற்று நடவு, களை பறிப்பு, அண்டை வெட்டுதல் செய்திருக்கிறாள். இப்படிப் புழுதி உழவு செய்து ஈரமாக மட்டும் வைத்து நடும் சூட்சுமம் இப்போதுதான் கண்டிருக்கிறாள். கொல்லை மூட்டில் சின்னம்மா கடலைப் பயிர் செய்து வீட்டுக்கு வந்து எடுத்து வந்ததும், உருண்டை பிடித்ததும் வேக வைத்துத் தின்றதும் நினைவுகள்தாம்.

இப்போது இங்கே தண்ணிர் காணும் பூமியில் வேர்க்கடலை பயிரிட்டிருக்கிறாள்... ஒன்னரை ஏக்கருக்கு மேல்...

கர்ப்பூரம் கொளுத்திக் கும்பிட்டு விட்டு இருட்டுக் கவ்வு முன் வீடு திரும்புகிறாள்.

மாடுகளைக் கால்வாயில் கழுவிவிட்டுத் தானும் சுத்தமானவளாக ஏர் சுமந்தபடி பின்னே வரும் கன்னியப்பனைப் பார்க்கிறாள்.

அப்பா இவனுக்கு அறுபது ரூபாய்தான் கொடுப்பாரோ? ஏனெனில் ஏரும் மாடும் இந்த வீட்டுக்குரியவைதானே?

“இரு... வாறேன்...”

அப்பன் முற்றத்துக் குறட்டில் புதிய ரேடியோவைப் பார்த்து மகிழ்கிறார். குழந்தைகளும், அவர்கள் தந்தையும் ஒட்டல் பகோடாவும் பஜ்ஜியும் தின்று கொண்டிருக்கிறார்கள். சினிமாப்பாட்டு கேசட்டில் ஒடிக் கொண்டிருக்கிறது.

“அப்பா... கன்னிப்பனுக்கு ரூபா கொடுங்க..”

அப்பா தயாராக வேட்டி மடிப்பில் வைத்திருக்கிறார். அதே கற்றையைக் கொடுக்கிறார்.

செவந்தி எண்ணுகிறாள். அறுபது ரூபாய்...