பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கோடுகளும் கோலங்களும்

கரைக்குக் கூட்டிச் செல்கிறாள் செவந்தி. புடவைத் தலைப்பால் அவர் நெற்றியைத் துடைத்து விசிறுகிறாள். செம்பில் இருந்து கஞ்சித் தண்ணீரை எடுத்துக் கொடுக்கிறாள்.

கடலை விதைப்பு நடக்கிறது. அப்பா தானும் ஒர் ஏர்பூட்டி உழுவேன் என்று பிடிவாதமாக வந்தது அவளுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், முழு பூமியிலும் விதைப்பு. கன்னியப்பன் ஒர் ஏர்; வேல்ச்சாமி ஓர் ஏர். பூமி உள்ளே ஈரமாக, விதைக்கப் பதமாக இருக்கிறது. முன்பே கன்னியப்பன் ஒருவனே நான்கைந்து நாட்களாய் விதை நிலத்தைப் பதமாக்கி இருக்கிறான். உழுமுனை நிலத்தில் பதிந்து செல்கையில் திரம் மருந்து போட்டுக் குலுக்கி வைத்திருந்த கடலை வித்துக்களை ஒன்றொன்றாகச் செவந்தி விடுகிறாள். பின்னால் அடுத்த ஏர் அந்தக் கடலை மீதும் மண்ணைத் தள்ளி மூடுகிறது. எண்ணி ஐந்து வரிசைக்கு ஒன்றாக, ரைஸோபியம் போட்டு ஊட்டமேற்றிய பயிறு வித்தையும் விதைக்கிறாள்.

முழுதும் விதைத்து முடிய மாலை வரையாகிறது. இடையில் பசியாற ஒர் அரை மணி நேரம் தான் ஒதுக்கல்.

அப்பன் நிறைந்த மனசுடன் பூவரச மரத்தடியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பணத்தை எண்ணிப் பையில் வைத்து அவரிடம் தான் கொடுத்திருக்கிறாள்.

நட்டு முடிந்ததும் தயாராக வைத்திருந்த பாண்டு சட்டியில் மணலையும் எம்.என். மிக்ஸ்சரையும் கலந்து நெடுகவும் தூவுகிறாள்.

கரையேறி மாடுகளைத் தட்டிக் கொடுக்கிறார்கள்.

வேல்ச்சாமி ஏர் மாடு இரண்டும் அவனே கொண்டு வந்தான்.

அவனிடம் எண்பது ரூபாய் கூலியை அப்பா எண்ணிக் கொடுக்கிறார்.

“கன்னிப்பா... இந்தா!" கத்தையாக நோட்டுக்களைக் கொடுக்கிறார்.

“இருக்கட்டும் மாமா, வூட்டுல மாட்டை ஏரைக் கொண்டு கட்டிப்போட்டு தண்ணி ஊத்திட்டு வந்து வாங்கிக்கறேன்!”