பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

57



சார்ந்தவர்களிடமும், அவர்களையும் கடந்த பிறரிடமும் அந்த ஒழுக்கவுணர்வை வருவித்தல் வேண்டும். தன்னை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது ஒளி ஆகாது. பிறவற்றையும் வெளிப்படுத்திக் காட்டவல்லதே ஒளி மேலும் அஃது எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியான பொருள்களை வெளிப்படுத்தவும், ஒளிப்படுத்தவும் வல்லதோ, அந்த அளவுக்கு அது பேரொளி. அப்பேரொளி போலவே மாந்தனுக்குள்ள அன்பு, அறிவு, பண்பு, பயன் முதலியவை பரந்துபட்டு விரிந்து உலகை மலரச் செய்தல் வேண்டும். அம்முயற்சியே வாழ்க்கை எனப் பெறும். இவை தவிர்த்துத் தான் தானாக மட்டுமே இருப்பது வாழ்க்கையன்று. ஒருவன் தன்னையிழந்து தாமாக மாறுவதையே அன்பு வாழ்க்கை, அருள் வாழ்க்கை, அற வாழ்க்கை, வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை என்று கூறுவர் சான்றோர். அத்தகைய வாழ்க்கையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவனே மாந்தத் தகுதியுள்ளவன். அவனே தக்கவன். அத் தக்கவனைத் தேர்ந்தே ஒரு வினைக்கு செயலுக்குத் துணையாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் உலகில் செய்யப் பேறும் வினைகள் அனைத்தும், பொதுநலம் கருதியதாகவே இருத்தல் வேண்டும். பொது நலத்துள் தன்னலமும் இயல்பாகவே அடங்குமாகலின் வினை நோக்கம் தன்னலத்தைக் கருதியதாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. அவ்வாறானால் வினைப் பயனும் குறுகியதாக அமைந்து விடும். தன்னையும் தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்களினத்தின் நலனையும் அளாவிட அமைந்ததாகவே வினைகள் இருத்தல் வேண்டுமாகலின், தக்கவர்களையே அவ்வினைக்குத் துணவர்களாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். தக்க துணைவர்கள் அமைத்துக் கொண்டு இயங்கும் ஒரு செயலைப் பகைவராலும் அழித்துவிட முடியாது என்பது திருவள்ளுவம்.

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்

(446)