பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

செயலும் செயல் திறனும்



உள்ளத்துணிவும் அறிவுத் துணிவும் நமக்கு வேண்டும். அத்துடன் நம் அறிவின் மேலேயே நமக்கு ஒரு தன்னம்பிக்கையும் ஒரு தன்னுணர்வும் தேவை.

'நாம் இச்செயலை எப்படியும் முழு வெற்றியுடன் செய்து விடமுடியும்' என்பது தன்னம்பிக்கை. 'நாம் இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முடியும். இதில் ஈடுபட ஈடுபட, இது பற்றிய முழு அறிவும் நமக்கு விளங்கிவிடும்' என்று எண்ணி ஊக்கம் பெறுவது தன்னுணர்வு. இவ்வுணர்வுகள் வளர வளர மேலும் நமக்கு உள்ள ஊக்கமும் அறிவூக்கமும் தோன்றிக் கொண்டே இருக்கும்.

6. ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்

அத்துடன், இன்னொன்றையும் நாம் செய்யலாம். இதற்குத் திருவள்ளுவப் பேராசான் ஊக்க உரையாகவும், உளவுரையாகவும் ஒன்றை நமக்கு அறிவுறுத்துகிறார். அவ்வாறு உள்ளமும் அறிவும், சோர்வும் தளர்ச்சியும் ஊறும் பொழுது, நமக்குத் தெரிந்த நண்பர்களுள் முதிர்ந்த பட்டறிவுள்ளவர்களுள் ஒழுக்கம் உடையவர்களை அண்டி நம் நிலைகளை எடுத்துச் சொல்லி, அத்தொய்வு நிலைக்கும் செயல் இடர்ப்பாட்டிற்கும் உள்ள காரணத்தைத் தெரிந்து, கொண்டு அவர்களின் வாய்ச் சொல்லின்படி நடந்துவிட வேண்டும் என்பார்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்

(415)

அஃதாவது, 'வழுக்குதலையுடைய சேற்று நிலத்தில் நடக்கும்பொழுது, நமக்கு ஊன்று கோல் போல் உதவுவன ஒழுக்கம் உடையவர்களின் வாய்ச் சொற்கள்' என்றார்.

செல்வம் உடையவரைச் சென்று கேளுங்கள்; அல்லது பதவி அல்லது 'அதிகாரம் உடையவர்களைப் போய்க் கேளுங்கள்; அல்லது கற்றவர்களைக் கேளுங்கள்' என்று அவர் அறிவுரை கூறவில்லை. 'ஒழுக்கம் உடையவரிடம் போய் விளக்கம் கேளுங்கள்' என்று பண்புடையாளர்களை நமக்கு ஆற்றுப்படுத்துகின்றார், ஏன்? செல்வம் உடையவர், செல்வ நாட்டம் கொண்டு மட்டும் நமக்கு அறிவுரை கூறுவாராம் பதவி அல்லது அதிகாரத்தில் இருப்பவர்கள், நாம் எடுத்துக் கூறுவதை முழுவதும் செவ்வனே சிந்தியாமல், கட்டளைத் தோரணையிலேயே நமக்கு அறிவுறுத்துவார்களாம்; கற்றவர்கள் ஒருவேளை ஒழுக்கம், பண்பு அற்றவர்களாக இருப்பின், தவறான சூழ்ச்சிகள், குறுக்குப் பாதைகள், நெறியற்ற முறைகளில் நமக்கு வழிகாட்டி விடலாமாம். ஆகவேதான் ஒழுக்கமுடையவர் வாய்ச் சொல்லை, அவ்வக் காலத்தில் கேட்டுச் செய்யுங்கள்' என்றார்.

இதற்குப் பரிமேலழகர், 'கல்வியுடையரேனும், ஒழுக்கம் இல்லாதார், அறிவிலராகலின், அவர் வாய்ச்சொல் கேட்கப்படாது' என்பது தோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்' என்றார்' என விளக்கம் தருவார்.