பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

215



அகர ஒலிக்கு ஒரு மாத்திரை, ஆகார ஒலிக்கு இரு மாத்திரை என்பனவும், அம்மாத்திரை எழுத்துகளால் ஆன மொழிகளும், அவற்றின் இலக்கண அமைப்புகளும், பாடல்களின் நிரையசை நேரசை அளவுகளும், அகவல், செப்பல் முதலிய ஓசை அளவுகளும் கணக்கே, கணக்கே, கணக்கே!

ஓர் உயிர் பிறப்பதும் கணக்கு அது வளர்வதும் கணக்கு அது வாழ்வதும் கணக்கு மறைவதும் கணக்குதான். கணக்கின்றிக் கணமும் இல்லை. காலமும் இல்லை; இடமும் இல்லை!

இனி, இன்னோர் உண்மையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இக் கணக்கு அமைப்புகளின் பிறழ்ச்சிகளே - பிசகுகளே அழிவுகள் என்பதை நாம் அறிதல் வேண்டும்.

இயற்கை இயக்கப் பரப்பில் எங்கோ ஓரிடத்தில் நிலவும் கணக்கியல் பிறழ்ச்சியே பருவக் கோளாறுகள், புயல்கள், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், கடல் கொந்தளிப்புகள், உலகழிவு முதலிய கொடுநிகழ்ச்சிகள்.

உடலியக்கத்தின் கணக்குப் பிறழ்ச்சிகளே - பிசகுகளே - நோய்கள். இடையழிவுகள், இறப்புகள் முதலிய கொடுநிகழ்ச்சிகள்!

எனவே, கணக்கே உலகின் அனைத்து இயக்கங்களுக்கும் வினைகளுக்கும் செயல்களுக்கும் மூல அடிப்படையானது. ஆகவே, கணக்கறிவு செயலறிவுக்கு செயலுக்கு மிக மிக இன்றியமையாதது என்பதை அறிதல் வேண்டும். இந் நுட்பங்களை மிக நுண்ணியதாக உணர்ந்துதான் நம் திருவள்ளுவப் பேராசான் மாந்த உயிரியக்கத்திற்கு மொழி முகாமையானது; அம்மொழிக்கும் முகாமையானது கணக்கறிவு என்னும் பொருளில்,

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு

(392)

என்று கணக்கிற்கு மொழியினும் முதலிடம் கொடுத்துப் பேசுகிறார். இன்னும், அவர் அருளித் தந்த திருக்குறள் என்னும் மெய்ப்பொருள் ஆக்கத்தில், கணக்கறிவு பற்றிக் கூறும் உணமைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவனவாகும். இவற்றை ஒரு சிறிது கூறி மேல் செல்லுவோம்.

கணக்கறிவு இல்லையானால் செயல் ஆக்கம் கெடும். அதன்பின் அந்தச் செயலைச் செய்வதற்கு நேர்மையல்லாத களவு வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்பார் திருவள்ளுவர். கணக்கறிவை அவர் அளவு என்னும் சொல்லால் உணர்த்துவர். எதையும் அளந்து