பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

187



இன்பத்தையே நுகர முடியாது. இருள் விலகுவதுதானே ஒளி? எனவே இருள் இல்லையானால், ஒளியை நாம் எவ்வாறு உணர்வது?

'நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்' என்னும் உண்மை, ‘ஒருவன் நிழலின் அருமையை, அதன் இன்பத்தை அறிய வேண்டுமானால், அவன் வெய்யிலிலே நின்று விட்டு அதன் பின் நிழலிலும் நின்றுதான் அறியமுடியும்’ என்பதையே உணர்த்துகிறது.

எனவே, துன்பம் என்பதைத் தவிர்க்கவோ அதனின்று தப்பவோ எவராலுமே முடியாது என்பதைத் தெளிதல் வேண்டும். காலமுழுவதும் ஒருவன் நிழலிலேயே இருந்துவிட முடியாது. இருந்துவிடவும் கூடாது. உடலியல் தன்மை அவ்வாறு அமையவில்லை. நிழலிலேயே உடல் தொடர்ந்து இருந்தால், அது நோயுறுகிறது. வெய்யிலிலும் நிழலிலும் மாறி மாறி இருந்து பயிலுமாறே உடலின் இயற்கைத் தன்மை அமைக்கப்பட்டிருப்பதை நாம் உணர்தல் வேண்டும். அதுபோலத்தான் நம் உள்ளத்தின் தன்மையும் பலவாறான உணர்வு நிலைகளை மாறி மாறி உணர்கின்றபடியாக இயற்கையால் அமைக்கப் பெற்றுள்ளது. ‘இடும்பையாவது உள்ளத்தின் ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை’ என்பார் பரிமேலழகர்.

உடலால் ஒருவன் வலுப்பெற்று ஊக்கமுறுதலை ‘வீரம்’ என்று நாம் சொல்வதுபோல், உள்ளத்தால் ஒருவன் வலுப்பெற்று ஊக்கமுறுதலையும் ‘வீரம்’ என்றே கருதுதல் வேண்டும். பருப்பொருள் தாக்கத்தை உரமுற்ற உடல் தாங்கிக் கொள்வதுபோல், நுண்பொருள் தாக்கமாகிய துன்பத்தையும் உரமுற்ற உள்ளம் தாங்கிக் கொள்கிறது.

இவ்வாறு துன்பத்திற்குத் துவளாமல் எதிர்நின்று ஏற்றுக் கொள்பவர்களையும் அவர்கள் செய்யும் வினைகளையும் திருவள்ளுவப் பேராசான், ‘உயிர் அஞ்சா மறவர்’ (778), ‘ஊறு அஞ்சா வன்கண்’ (762, ‘கூடி எதிர் நிற்கும் ஆற்றல்’ (765), ‘மனத்திட்பம்’ (661), ‘தாழாது உஞற்றுபவர்’ (620), ‘சிதைவிடத்து ஒல்கார் உரவோர்’ (597), ‘அறிவறிந்து ஆள்வினை’ (618), ‘அறிந்தாற்றிச் செய்தல்’, (515), என்று பலபடப் பாராட்டிப் பெருமைப்படுத்திக் கூறுவார். அவர்களின் உழைப்பை ‘எருது போல் உழைத்தல்’ (624) என்றும் உவமை கூறி அமைவு செய்குவார்.

ஆகவே, ஒரு வினையையோ, செயலையோ மேற்கொண்ட ஒருவர், அகப்புறத் தாக்கங்களாகிய துன்பத்தாலோ வேறு பிறர் செய்யும் தடைகளாலோ, பொருள் தொய்வுகளாலோ இடை நிறுத்தம் இன்றியும் (472), இறுதி வரையிலும் (663) செய்து முடித்தல் வேண்டும் என்பதை உறுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.