பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

121



நிலைகள் அல்ல. அதனால்தான் இந்நிலை உணர்வுகள் அவற்றிற்குப் படிநிலை வளர்ச்சி பெறுவதில்லை. பொதுவாக அறிவுநிலைகளே வளர்ச்சி பெறக் கூடியன. உணர்வுநிலைகள் எல்லா உயிர்களுக்குமே பொதுவானவை. அவ்வுணர்வு நிலைகள் கூட அவற்றின் மன உணர்வுகள் அல்ல. உறுப்பு உணர்வுகளே.

4. எதிர்கால அறிவு - ஆவதறியும் அறிவு

கண்களுக்குப் பார்க்கின்ற உணர்வும், காதுகளுக்குக் கேட்கின்ற உணர்வும் பிற பொறிகளுக்கு அவ்வவற்றிற்குரிய உணர்வுகளும் இருப்பன போலவே, அவற்றிற்குச் சில உடல்நிலை ஊறுணர்வுகளும் உண்டு. எறும்புக்கும், தும்பி முதலிய பூச்சிவகைகளுக்கும் மழை வரப்போவது தெரிந்திருப்பது ஊறுணர்வே தவிர, அறிவுணர்வன்று. அறிவுணர்வு ஊறுணர்வுகளையும், உள்ள வுணர்வுகளையும் கூட நுனித்து அறியும் உணர்வாகும். அது விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அறவே இல்லை. சில பறவைகளும், விலங்குகளும் தங்களுக்கு மாறான சில உணர்வுகளை மோந்து பார்த்த அளவில் தவிர்த்து விடுகின்ற உணர்வும் மூக்கின் ஊறுணர்வே ஆகும்; அறிவுணர்வு அன்று. நாயும் பூனையும் கோழியும் போன்றவை தம்மிடம் பழகுகின்றவர்களை அறிந்து கொள்ளுதல் ஊறுணர்வே ஆகும். ஆனால் மாந்தர்களிடம் உள்ள அனைத்து உணர்வு நிலைகளுக்கும் அறிவுக்கும் நிறைய தொடர்புண்டு அறிவுணர்வு வளர வளர ஊறுணர்வு குறைந்து விடுகிறது. எனவே, மாந்தனை மட்டுமே அறிவுள்ள விலங்கு என்று கூற முடியும். ஆனால் இக்காலத்து மாந்தத் தொடர்புடைய குரங்கு முதலிய அறிவு நிலை வளர்ச்சி உடைய விலங்குகளுக்கும் ஓரளவு அறிவியலறிவு ஊட்டப் பெறுகின்ற முயற்சிகள் நடக்கின்றன. எனினும் இவ்வறிவு படிநிலை வளர்ச்சிப் பெறுவதில்லை.

ஆகவே, மாந்த அறிவுநிலை என்பது, எதிர்கால அறிவை ஆராய்கின்ற அறிவியலறிவு ஆகும். இதைப் பகுத்தறிவு என்று குறிப்பிடுவது சரியன்று. நன்மை தீமைகளைப் பகுத்துப் பார்க்கும் அறிவையே பகுத்தறிவு என்று கூறிவருகின்றோம். ஆனால், அறிவு வளர்ச்சியில் பகுத்தறிவு ஒரு படிநிலையே தவிர முற்ற முடிந்த அறிவாகாது. அதற்கு மேலும் அது வளர்ச்சி பெற்று அறிவியலறிவாகவும், மெய்யறிவியலறிவாகவும் விளங்குவது உண்டு. அவற்றின் விளக்கங்களெல்லாம் இங்குத் தேவையில்லை.

இனி, எதிர்காலத்தை ஆய்ந்தறியும் அறிவியலறிவே மாந்தர் அனைவர்க்கும் மிகச் சிறப்பையும் பயனையும் அளிப்பது; இந்த அறிவுநிலகளையே திருவள்ளுவப் பெருமான், ஆவதறியும் அறிவு (427),