பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

செயலும் செயல் திறனும்



14. கணக்குத்திறம் : உலகில் உள்ள அனைத்துச் செயல்களுமே கணக்கை அடிப்படையாகக் கொண்டவையே. உலகப பெரும் உருண்டை சுழல்வதும், கதிரவ மண்டில இயக்கமும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு உலகின் கண் நிகழும் செயற்பாடுகளும் உயிர்களின் தோற்றமும், வாழ்வும் முடிவும், அவ்வுயிர்களின் அனைத்து உடற்கூறுகளும், அவற்றின் பல்வேறு வகையான இயக்கங்களும் ஆகிய அத்தனை வினைகளும் கணக்கியல் கூறுகளை அடிப்படைகளாகக் கொண்டவையே. கணக்கின்றி ஒர் அணுக்கூறும் இயங்குவதில்லை. இந்த அரும்பெரும் உண்மையை அனைவரும் உற்று நோக்கி உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

அனைத்து மூல ஆற்றல்களும் கணக்கை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. அக்கணக்கறிவைக் கொண்டுதான் ஆற்றல்களை அறிய முடிகிறது. அளக்க முடிகிறது. பயன்படுத்த முடிகிறது.

இனி, ஆற்றல்களின்றிப் பொருள்களும் இல்லை. எனவே அப்பொருள்களும் கணக்கை அடிப்படையாகக் கொண்டே தோன்றுகின்றன; வடிவம் எய்துகின்றன; இயங்குகின்றன; இணைகின்றன; மாறுதலுறுகின்றன; மறைகின்றன. பின் மீண்டும் தோன்றுகின்றன. அறிவு என்னும் உணர்வே கணக்கை அடிப்படையாகக் கொண்டதுதான்.

பொருள்களைப் பார்க்கின்ற ஒளித்திறன் அளவைக் கண்கள் பெறவில்லையானால், பொருள்களைத் நம்மால் பார்க்க இயலாது. ஒசையைக் கேட்கின்ற ஒலித்திறன் அளவை நம் செவிகள் பெற்றிருக்கவில்லையானால் பொருள்களின் அசைவொலியை நாம் கேட்க முடியாது. அவ்வாறுதாம் நம் ஐம்புலன் உணர்வுகளும். எனவே அறிவே கணக்குதான்.

இனி, கணக்குத் தொடர்பு இல்லாதவனாகவாக நாம் கருதிக் கொண்டிருக்கும் பிற கலையறிவுகள், அழகுணர்வுகள், இலக்கிய இலக்கண உணர்வுகள், நிலைகள், பிற வாழ்வியல் நிலைகள், உணவு முறைகள் அனைத்தும் கணக்கியலை அடிப்படையாகக் கொண்டனவே.

கணக்கில்லையானால் அழகில்லை; ஒவியமில்லை; சிற்பமில்லை; இசையில்லை; பிற கலைகள் இல்லை; இலக்கியமில்லை; இலக்கணமில்லை; ஏன், நாம் பேசும் மொழிகளும், பறவைகள், விலங்குகள் இவற்றின் ஒலிகளும், நம் எழுத்தும் எழுத்தொலிகளும் கூட கணக்கியலையே அடிப்படையாகக் கொண்டவையே.