பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

செயலும் செயல் திறனும்



கருதத் தக்கது. வெறும் உடல் வலிவு முரட்டுத் தனத்தை வளர்க்கும். முரட்டுத்தனம் உள்ளத்தின் உணர்வுகளைக் கேடுறச் செய்யும் திசைத் திரும்பச் செய்யும். உடல் நலமே உள்ளத்தையும் அறிவையும் நல்ல செயல்களில் ஈடுபடச் செய்யும். கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு ஓடும் கட்டற்ற காளைமாடு போல், உடல்வலிவு, முரட்டுத் தனமாகச் செயல்படும். வண்டியில் பூட்டிய காளை போல, ஒழுங்குறச் செயல்படச் செய்வது, உடல்நலம். உடல் வலிவு, கட்டுப்பாடற்று வளர்ந்து கிடக்கும் காட்டுப்புதர் போல்வது. அதில் முட்செடிகளும் இருக்கும்; நச்சுக் கொடிகளும் இருக்கும். ஆனால், உடல் நலம் அழகுறச் சமைத்த ஒரு பூங்கா போல்வது. அங்கே அழகிய பூஞ்செடிகளும், பழந்தரும் மரங்களும், அழகிய புல்வெளிகளும் இருக்கும். உடல் வலிவு, உடல் நலம் இவை தொடர்பாகவும், அவற்றுக்கான உணவுத் தேவை தொடர்பாகவும் சில இயற்கையான பிரிவினர்களைக் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்.

சிறந்த அறிஞர்கள் அறிவு நலந்தரும் உணவையே உண்கின்றனர்.
நன்கு கற்றவர்கள் உடல் நலத்துக்கான உணவையே உண்கின்றனர்.
ஒரளவு கற்ற பொதுவானவர்கள் உடல் வலிவுக்கான உணவையே உண்கின்றனர்.
கல்லாதவர்களும் சிறிதே அறிவுள்ளவர்களும் உடல் தேவைக்கான எந்த உணவையும் உண்கின்றனர்.
கீழாக அறிவுள்ளவர்கள் - பசிக்காகவே உண்கின்றனர்.
அதனினும் கீழானவர்கள் - ஆசைக்காகவே உண்கின்றனர்.
விலங்குகளும், பறவைகளும் - உண்பதே உயிரியக்கமாகக் கொண்டன.

இவ்வகைகளையே இன்னும் பலவாறாகவும் பிரித்துக் கூறலாம். அவை இங்குத் தேவையில்லை என்பதால் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறோம். இனி, உணவை மிகக் குறைத்து உண்கின்ற நிலைகளும், பருவுணவு அன்றிப் பருகுநிலை உணவு உண்கின்ற நிலைகளும், பருகுநிலை உணவும் இன்றி, ஒரோ ஒருகால் உண்ணும் பச்சிலை உணவு நிலைகளும், அதுவும் இன்றிக் காற்று உணவு நிலைகளும் பிறவும் உண்டு. இங்கு அவை பற்றிய அறிவு அறவே தேவையில்லையாதலால் அவற்றையும் தவிர்க்கிறோம்.

இனி, உடலை நலமாக வைத்துக்கொள்ளும் ஒரு மாந்தப் பொதுநிலையே, உடல், உள்ளம், அறிவு ஆகிய மூன்று இயக்கங்களும் கூடிய செயல் நிலைக்கு உகந்ததாகும். இந்த மூன்று உயிர்க்கூறுகளிலும் ஒன்றை மட்டுமே சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்களுக்கும் அல்லது, இரண்டை மட்டுமே சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்களுக்கும், அல்லது மூன்றையுமே சிறப்பாக வளர்த்தெடுக்க விரும்புகின்றவர்களுக்கும், அவரவர்களின், வாழ்க்கை