பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

திருவெம்பாவை விளக்கம்


நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளும் * பிறவா யாக்கைப் பெரியோன்’ என்று சிவ பரம்பொருளைக் குறிப்பிட்டனர். செம்மை சார்ந்தது சிவம் என்பர். அச்சிவபெருமானே மாணிக்கவாசகப் பெருந் தகையாய் அறிவில் நிறைந்திருந்தார். வாக்கில் கலந்திருந்தார் என்றால் மணிவாசகரின் மாண்பினைக் கட்டுரைக்கவும் ஒல்லுமே! எனவே காதற்சுவையமைந்த திருக்கோவையார் எனும் திருச்சிற்றம்பலம் 'கோவையாரைப் பாடிய மாணிக்கவாசகரை நோக்கிக் கோவை பாடிய வாயால் ஒரு பாவை பாடும்’ என்று அப்பரமனே விளித்துத் திருவெம்பாவைப் பாடல்களைப் பெற்றார் என்பர். மேலும் மணிவாசகப் பெருந்தகையார் அருளிச்செய்த பாடல்களைச் சிவபெருமானே தம் திருக்கையினால் எழுதிக் கொண்டார் என்று வழி வழியாகச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு இறைவன் திருவாசகத்தைத் தம் திருக்கரத்தால் எழுதிக் கொண்டதற்கு மனோன்மணீய ஆசிரியர், ஒரு காலத்தில் உலகம் அழிந்த பிறகு, தாம் மட்டும் தனித்திருக்கும்பொழுது, அத்தனிமைத் துயரைப் போக்கிக் கொள்ளத் திருவாசகம் படிப்பது என்று முடிவெடுத்து அதனை முற்றிலுமாக எழுதிக் கொண்டார் என்பர்.

கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே

மேலும் பண்டை நாளில் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்கள் முடிசூடும் காலத்தே திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்பெற்றன என்பதனை ஊகித்தறிய இடமுண்டு என்பர் அறிஞர். தமிழர் வணிக உறவும், பண்பாட்டுத் தொடர்பும் கொண்டிருந்த தாய்லாந்து, சயாம் முதலிய கடல் கடந்த நாடுகளிலும் அந்நாட்டு மன்னர்கள் முடி புனையும் காலங்களில் திருவெம்பாவைப் பாடல்கள் ஒதப்பெற்று வருகின்றன என்று கூறப்படுகின்றது.