பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் 13 1. கடவுளை வாழ்த்தி வணங்குதல் எழுத்துக்களுக்கெல்லாம் 'அ' முதன்மை (மூலம்) ஆனதுபோல் உலகிற்குக் கடவுள் முதன்மையானவர். 1 தூய அறிவுருவான கடவுளின் நல்ல திருவடிகளை வணங்காராயின் ஒருவர் படித்ததனால் பயன் என்ன? 2 மலரனைய மென்மையான உள்ளங்களில் தங்கும் இறைவனின் சீரிய அடிகளை என்றும் இறைஞ்சுபவர் நிலவுலகில் நெடிது வாழ்வர். 3 விருப்பு வெறுப்பற்ற தேவனின் அடிகளைப் பணிவோர்க்கு எங்கும் என்றும் துன்பமில்லை. 4 தலைவனாங் கடவுளின் உண்மைப் புகழை விரும்பிப் போற்றுவாரிடம் அறியாமையொடு கூடிய நல்வினை, தீவினை என இருவினைகள் இரா. 5 மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளால் தோன்றும், ஊறு, சுவை, ஒளி, மணம், ஒலி என்னும் ஐம்புல இன்பங்களை அடக்கிய கடவுளின் மாசற்ற திருநெறியில் ஒழுகுவோர் நெடிது வாழ்வார். 6 ஒப்பற்ற கடவுளின் திருவடியை விடாது தொழுவோர்க்கே மனக்கவலையைப் போக்கிக் கொள்ள முடியும். 7 அறக்கடலாகிய இறைவனின் அடியாகிய தெப்பத்தை அடைந்தோராலேயே பிற உலகப் பிணிப்புக் கடல்களைக் கடக்க முடியும். 8 மேற்கூறிய எட்டுக் குணங்களையும் உடைய கடவுளின் அடிவணங்காத தலைகள், குருட்டுக்கண் செவிட்டுக் காது முதலிய புலனற்ற பொறிகள் போல் பயனற்றனவாம். 9 இறைவனடியை நினைந்துவழி படாதார், பிறவியாம் பெருங்கடலைக் கடக்கார்; வழிபடுவோரே கடப்பர். 10