பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

அடைவுபடக் கூறுக” என்று கேட்டுக் கொண்டான். சேக்கிழாரும், “திருவாரூரில் இறைவன் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்குத் தில்லைவாழ் அந்தணர்என்று அடியெடுத்துக் கொடுக்க அந் நம்பியாரூரரும் திருத் தொண்டத் தொகையைப் பாடி அடியார்களைத் துதித்தார் ; பின்னர்த் திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாரின் திருவருள் பாலிக்கப்பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலைப் பாடி அடியார்களைத் துதித்தார்; அத்திருவந்தாதியை இராசராச சோழன் (1) சிவலாய முனிவர் முதலியோர் கேட்டுப் பாராட்டினர்’’ என்று கூறினார். அரசன், அத்தூயகதையை அடைவுபடச் சொல்வீர்” எனக்கேட்கச் சேக்கிழாரும் தில்லை நகரை அடைந்து கூத்தப் பெருமானை வணங்கி ‘உனது அடியர் சீர் அடியேன் உரைத்திட அடியெடுத்து இடர் கெடத் தருவாய் ’’ என வழுத்தினார். இறைவனும் தொண்டர் சரித்திரமனைத்தும் அவரது மனஅறையில் குவித்ததோடு[1] “உலகெலாம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார். அதனையே முதலாகக் கொண்டு அச்சொற் றொடரையே தமது புராணத்தின் நடுவிலும் ஈற்றிலும் பொருத்திச் “சைவ பரிபாஷைகளையும் சம்பிரதாயங்களையும் தெரித்து நாயன்மார் வரலாறுகளைச் சேக்கிழார் பாடி முடித்தார்.

நூல் அரங்கேற்றம்

இச்செய்தியை அரசன் கேட்டு மகிழ்ந்து தில்லைக்கு வந்து சேர்ந்தான். வளவர்கோன் வரவறிந்து தில்லை மறையோரும், வண்மை மடபதிகளும், மற்றுமுள்ள பெரியோர்களும், சேக்கிழார் பெருமானும் வரவேற்றனர்.


  1. சேக்கிழார் பிள்ளைத் தமிழ், காப்புப் பருவம், செய்யுள் 4.