பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- 45 -

உருக்கிய நெய்யில் பாலைத் தெளித்தாற் போன்ற வரிக்குரல் மிடறும் பல புள்ளிகளும் உடைய அழகிய சேவல், ஈர மணலிலுள்ள நாங்கூழ்ப் புழுவை எடுத்துக் காலை உணவாகத் தன் பேடைக்கு ஊட்டி மகிழ்ந்தது. பின்னர் தானும் உண்டது. கணவனின் பெருந்தகை மையை எண்ணிய பேடை தன் சேவலை நோக்கி, நோக்கி மகிழ்ச்சியடைந்தது. இக் காட்சியினை நற்றினை என்னும் நூலில் காணலாம்.

" உருக்கு நறுநெய் பால் விதிர்த்தன்ன
வரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக்
காமரு தகைய காணவாரணம்
பெயல்நீர்போகிய வியன்நெடும் புறவில்
புலரா ஈர்மணன் மலிரக் கெண்டி
நாள் இரை கவரமாட்டிகத்
தன்பெடை நோக்கிய பெருந்தகு நிலையே"
(நற்றினை)

இல்லின் கண் உறைகின்ற கோழிப் பெடையானது மாலைக்காலம் வந்ததைக் கண்டவுடனே காட்டுப்பூனைகள் தன் பிள்ளைகளைக் கவருமோ என்ற அச்சத்தினால் கலங்கிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல், அவைகள் அனைத்தும் ஒருங்கே கூடும் பொருட்டுக் குஞ்சுகளைத் துன்பத்துடன் அழைத்துக் கூவியது. இங்கு தாய்க் கோழி தன் குஞ்சுகளிடம் கொண்டுள்ள பேரன்பு பெரிதும் போற்றுதற்குரியதாகும். மேலும் தாய்க் கோழி சேய்க்குக் கற்றுக் கொடுக்கும் கல்வியானது இங்கு எண்ணுதற்குரியதாகும். அடுத்து ஆங்தை குறித்து ஆராய்வோம்.