பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


பாலை நிலத்தின் வெம்மையும் தண்ணீர் கிடைக்காது உலர்ந்து வாடும் மரங்களும் தன்னைப் பருகும் என்று மரத்தின் நிழல் மறைந்து போயிற்றாம்! என்னே கவிஞரின் கற்பனை இக்கருத்து,

நிழலுரு இழந்த வேனிற்குன் றத்து
பாலை சான்ற சுரஞ்சேர்ந் தொருசார்.[1]

என்ற மதுரைக்காஞ்சி அடிகளில் வந்துள்ள கருத்துடன் ஒப்பு நோக்கி உணர்தற் பாலது. இனி, வானவர்கள் நிலத்தில் அடியிட்டு நடவாமல் இருப்பதற்கும்,[2] சூரியன் பாதிநாள் உலகில் திரிவதற்கும் பாதிநாள் திரியாததற்கும்,[3] மழையும் பனியும் தோன்றுவதற்கும்[4] இயல்பாகவுள்ள காரணங் களைத் தவிர்த்துக் கவிஞர் தன் காரணங்களை ஏற்றிக் கூறும் இடங்களில் இத் தற்குறிப்பேற்ற அணிகளைக் காணலாம். மகளிர் கூந்தலில் முடிந்திருந்த பூக்களிலுள்ள தேனைப் பருகுவதற்கு வண்டுகள் வந்து மொய்க்கின்றன. அவை மேலுங் கீழுமாகப் பறந்து நிற்பது இயல்பு. கொங்கைகளின் பாரத்தால் அவர் தம் சிற்றிடை வருந்தா நின்றமையால், தாம் அவர்கள் கூந்தலில் உட்கார்ந்தால் அவர்கள் நுண்ணிய இடை முறிந்து போகக்கூடும் என்று எண்ணி அவை மேலே வருவதும், வேறு புகலிடம் இன்மையால் அவை கூந்தலின் மீது விழுவதும் ஆயின என்று கவிஞர் தன் கருத்தை ஏற்றிக் கூறுகிறார்.[5]


  1. மதுரைக்காஞ்சி-வரி : 313-34
  2. தாழிசை-84
  3. தாழிசை-S5
  4. தாழிசை.86
  5. தாழிசை-96