பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



32

கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி


என்று தன் பாடலில் ஆண்டிருப்பது எண்ணி மகிழ்வதற்குரியது.

இரவில் ஒரு மங்கையும் அவள் கணவனும் கலவிப்போர் நிகழ்த்திய பொழுது காமம் மீதுார மனங்கனிந்து முறை பிறழ்ந்து காதற் சொற்களைப் பேசிக்கொண்டிருந்தனர். அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அவள் வளர்த்த கிளி, 'சொன்னதைச் சொல்லுமாம் கிளி' என்ற தன் குணத்திற்கேற்பப் பகலில் அவற்றைச் சொல்லத் தொடங்கிற்று. அவற்றைக் கேட்ட அம்மங்கை மிகவும் நாணி கிளியை மேலும் பேசவிடாது அதன் வாயைப் புதைத்தாள். இதனைக் கவிஞர்,

நேயக் கலவி மயக்கத்தே
நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப
வாயைப் புதைக்கும் மடநல்லீர்
மணிப்பொற் கபாடந் திறமினோ[1]

என்று காட்டுகிறார், பிற்காலத்தில் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி அவர்களும் சதாவதானம் சரவணப் பெருமாள் கவிராயரும் வினாவிடையாக அமைத்துப் பாடிய

தத்தை யொருத்திதன்கைத்
தத்தையையோ யாதடித்த
வித்தையென்ன தென்முகவை
வேல்வேந்தே-மெத்தையின்மேல்
புல்லினவென் மன்னன்
புகன்மொழிகற் றுச்சகிபால்
சொல்லினையே என்று துடித்து[2]


  1. தாழிசை-67,
  2. தனிச் செய்யுள் சிந்தாமணியிலுள்ளது இப்பாடல்.