பக்கம்:வைணமும் தமிழும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. பாசுரங்களில் அகப்பொருள் தத்துவம்

எம்பெருமானை அநுபவித்தல் பலவகையாக நடை பெறலாம். அவனுடைய திருநாமங்களைச் சொல்லியநுபவித்தல், திருகல்யாண குணங்களைச் சொல்லியநுபவித்தல், வடிவழகைச் சொல்லியநுபவித்தல், அவன் உகந்தருளிய திவ்விய தேசங்களின் வளங்களைச் சொல்லியநுபவித்தல், அங்கே அநுபவமுள்ள ஶ்ரீவைணவர்களின் பெருமையைப் பேசி அநுபவித்தல் என்று பல வகையாக நடைபெறும் பக்தி அநுபவம்.இவற்றுள் மிக அருமையான அற்புதமான மற்றொரு வகையும் உண்டு. அஃதாவது ஆழ்வார்கள் தாமான தன்மையைவிட்டு பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்று வாயாலே பேசியதுபவித்தல். இதனை ‘நாயக-நாயகி பாவனை' என வழங்குவர். இந்த வைணவ தத்துவம் பரம் பொருளுக்கும் ஆன்மாவிற்கும் கூறும் ஒன்பது வகையான உறவுகளில் இதுவும் ஒன்று. இந்த உறவே ஏனைய வற்றினும் சிறந்தது; உயிராயது, இந்த உறவினை விளக்கும் பாசுரங்களை நாலாயிரத்தில் காணலாம். வைணவப் பெருமக்கள் சங்க காலத் தமிழ் நெறியினையொட்டி ஓர் அகப்பொருள் நெறியினைப் பாசுரங்களில் அமைத்துக் காட்டிய பெருமையினைப் பெற்றனர். புருடோத்தமனான எம்பெருமானின் பேராண்மைக்கு முன்னர் உலகிலுள்ள ஆன்மாக்கள் யாவும் பெண் தன்மையினை அடைந்து நிற்கும் என்பது அவர்கள் கண்ட தத்துவம். எனவே ஆழ்வார்கள்,