பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

33


பறவைகளும் கூட கொடுத்தும் கொண்டுமே வாழ்கின்றன. இவ்வுலகில் இன்னொருவர்க்குக் கொடுப்பதும் அதனால் வரும் மகிழ்வும் நிறைவுமே வாழ்க்கையின் முழுப்பயன் ஊதியம் என்பது குறளறம் ஆகும்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதிய மில்லை உயிர்க்கு.

(23)

இது பொதுவுடைமை கூறும் நலத்தினும் கொள்கையினும் உயர்ந்ததாகும். பொதுவுடைமை உடலால் செய்யப்பெறும் முயற்சி என்று பொருள் கொண்டால், இக்குறளறம் கூறும் பொதுமையுணர்வு உளத்தால் செய்யப்பெறும் முயற்சியாகும். சட்டத்தால் ஒரு பொருளை இருவர்க்குப் பகிர்வதை விட அன்பால் பகிர்வது; உயர்ந்தது: சட்டவுணர்வு; பருமையானது, அன்பில்லாதது; உயிர் மலர்ச்சிக்கு வழி வகுக்காதது, அறவுணர்வு நுண்மையானது; அன்பு நிறைந்தது; உயிர் மலர்ச்சிக்கு உதவுவது. எனவேதான் பொதுமையுணர்வு பொதுவுடைமை உணர்வை விடச் சிறந்ததாகும். பொதுவுடைமையுணர்வு. உடைமைகளை மட்டும் பகிர்வு செய்யும் அடிப்படையுடையது. பொதுவுடைமைக் கொள்கையில் ஒருவன் பொருளில்லாமல் இருக்க மற்றொருவன் பொருளுடன் இருத்தல் கூடாது. பொதுமைக் கொள்கையில் ஒருவன் மகிழ்த்திருக்க அல்லது துயருற்றிருக்க இன்னொருவன் மகிழ்ச்சியுடனும் இருக்க இயலாது. ஒருவன் துன்பத்திலும் மற்றொருவன் பங்கு கொள்ளும் பொதுமையுணர்வுதான் அறவுணர்வாகும். அறம் என்னும் சொல்லுக்குப் பகிர்வு என்பதே சரியான சொல்லாகும். அறு என்னும் வேரடியாகப் பிறந்த சொல்லே அறம். பகு என்னும் வேரடியாகப் பிறந்த சொல்லே பகிர்வு. இதற்குப் பழஞ்சொல் ஒப்புரவு என்பது. இவ்வுயர்ந்த உணர்வுக்கு மக்கள் உயர்ந்து செல்ல வேண்டும் என்பதே தமிழர் அறக்கோட்பாட்டின் குறிக்கோள் ஆகும். விலங்குகளைக் கட்டியாளுவது போல் மக்கள் கட்டியாளப்பெறுதல் சிறப்பன்று. அவர்கள் தாமே இயங்குதலே சிறப்பு. எனவேதான் அறவுணர்வை அவர்கள்பால் வளரச் செய்தனர் பழந்தமிழ்ச் சான்றோர். சட்டவுணர்வை அல்லது சட்ட அறிவை எப்படி மக்கள் எல்லாம் பெற்றிருக்க வேண்டும் என்பது அரசியல் கோட்பாடோ, அப்படியே அறவுணர்வை அல்லது ஒப்புரவை அல்லது பகிர்வுணர்வை மக்கள் இயல்பாகவே பெற்றிருக்க வேண்டும் என்பது அறவியல் கோட்பாடு. எனவே சட்டவுணர்வை விட அறவுணர்வு தாழ்ந்தது என்று சொல்லிவிட முடியாது. அப்படியே பொதுவுடைமை யுணர்வை விடப் பொதுமையுணர்வு தாழ்ந்தது ஆகாது. மாறாக, உயர்ந்ததுமாகும். அதனடிப்படையிலேயே நாம் செய்ய விரும்பும் ஒரு தொழிலின் விளைவு அல்லது நலன் அல்லது பயன் கருதப்பெறுதல் வேண்டும். நலன் விளைக்காத ஒரு வினையை நாம் மேற்கொள்ளுதல் தவறு. இனி, நலன் மட்டுமே வரும் தொழில் உலகில் எங்கும் இல்லை.