பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



13. வினையறிந்தாரைத் துணைக்கொள்ளல்

1. தெரிதல் வேறு திறம்படச் செய்தல் வேறு

ஒரு வினையை எடுத்த எடுப்பில் திறம்படச் செய்வதற்கு நாம் அறியோம். கண் பார்த்தால் கை செய்யும் என்பது ஒரளவு உண்மைதான். எதிலும் எல்லா வினைகளையும் கண் பார்த்து விட்டாலே கை செய்துவிடும் என்பது அத்துணை சரியாகிவிடாது. ஒரு வினையைச் செய்யுமுன் அவ்வினையை நன்றாகச் செய்யத் தெரிந்தவனை நாம் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். வினைசெய்யத் தெரிந்தவன், அதைச் செய்யத் தெரியாதவனை விட மேலானவனல்லனோ? ஒரு வினையில் முன்னரே ஈடுபட்டு, அதில் உள்ள சுழிவு நெளிவுகளைப் பலவாறு உணர்ந்து, தம் பட்டறிவால் அந்த வினையை எளிதாகவும் செப்பமாகவும் சுருங்கிய செலவுடனும் செய்யத் தெரிந்தவர் ஒருவர் இருப்பார். அவர் அந்த அறிவு வரப் பெறுவதற்கு எவ்வளவோ காலத்தைச் செலவு செய்திருப்பார். எவ்வளவோ பணத்தைச் செலவு பண்ணியிருப்பார். அது தொடர்பாக எத்தனையோ திறமுடையவர்களைப் பார்த்து, அவர்களிடம் அதுவகையில் எத்தனையோ நுட்பங்களைக் கேட்டு அறிந்திருப்பார். அத்துணை அறிவும் நமக்கு ஏற்பட வேண்டுமானால், நாமும் எவ்வளவோ காலத்தை, பணத்தை வீணடிக்க வேண்டியிருக்கும். அவற்றை வீணாக்காமல் நாம் காக்க வேண்டுமானால், நாம் அவரிடம் போய், அவருக்குத் தெரிந்த வழிகளைக் கேட்டறிவதும், அவருக்குத் தெரிந்த உத்திகளை நாமும் கையாள்வதும் நம் வினை நிலைகளை எளிதாக்க உதவும் அன்றோ? அதைவிட்டு, நமக்கே எல்லாம் தெரியும் என்பதாக நாம் எப்பொழுதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. நமக்கு ஒரு வினைபற்றி முன்னரே ஓரளவு தெரியும் என்றாலும், ஒரு வினையைத் தெரிதல் வேறு, அதைத் திறம்படச் செய்தல் வேறு.

2. நுட்பங்கள்

ஒரு வினை முன்னரே நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அதைத் திறம்படச் செய்ய நமக்குத் தெரியும் என்று எண்ணி விடக்கூடாது. அதன் தொடக்கம், இடைமுயற்சி, முடிவு என்பவற்றில் எத்தனையோ நுட்பங்கள் இருக்கும். அவற்றை நாம் முன்கூட்டியே அறிந்திருப்போம் என்று சொல்ல முடியாது. அப்படியே அறிந்திருந்தாலும் அதன்