பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

என்னும் திருவருட்பாப் பாடல்களும், வள்ளுவர் உள்ளத்தின் மறு பதிப்பே வள்ளலார் உள்ளம்-என்பதற்குப் போதிய சான்றுகளாம். மேற்கூறிய பண்பினை உளவிகலார்(Psychologists) 'சிம்பத்தி' (Sympathy)அதாவது ஒத்துணர்வு- உணர்ச்சி ஒருமைப்பாடு என்கின்றனர்.இதைத்தான் வள்ளுவர் 'ஒத்தது அறிவான் உயிர் வாழ் வான்’ (214) என்னும் குறளில் குறிப்பிட்டுள்ளார்.

சுருங்கக் கூறின், வள்ளலாரும் வள்ளுவரும் கண்ட சமூகக் கோட்பாடு ‘ஒரே உலக ஒருமைக் கோட்பாடே’யாகும். இப்போதுள்ள ஐ.நா. நிறுவனத்தின் ஒரே உலகக் கொள்கைப் பணியை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் தொடங்கிவிட்டார். சான்றாக, வள்ளுவரின் பொது மறையிலுள்ள ‘ஒப்புரவு அறிதல்’ என்னும் தலைப்பு ஒன்றே போதுமே! ஒப்புரவு அறிதல் என்றால்- “தம்மால் இயன்ற எல்லையளவு உலகிற்கு உதவி செய்து உலகத்தோடு ஒத்து வாழ்தலை அறிந்து நடத்தல்” என்பது பொருளாம். உலகத்தோடு 'ஒட்ட ஒழுகல்’ என்னும் குறள் பகுதியும் ஈண்டு நினைவுகூரத் தக்கது

வள்ளுவனாரின் இந்த உயரிய சமூகக் கோட்பாட்டினை வள்ளலாரின் பாடல்களில் பரக்கக் காணலாம். இதோ சில:

"ஒருமையிற்கலந்தே உள்ளவாறு இந்த
உலகெலாம் களிப்புற்று ஓங்குதல்
என்று வந் துறுமோ-"

"உலகத் திரளெலாம் மறுவறக் கலந்து
வாழ்வதற்கு வாய்ந்த தருணம் இது என்றே
வாயே பறையாய் அறைகின்றேன்.”