பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

113



தளராமல், செயல் வெற்றியடையும் வரை மீண்டும் மீண்டும் முயற்சியுடன் உழைத்தல் வேண்டும் என்பதையே அனைவரும் உணர்தல் வேண்டும்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

(616)



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

(629)



ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழா துளுற்று பவர்

(620)

என்னும் குறட்பாக்களில் திருவள்ளுவப் பேராசான் முயற்சிக்கும் உழைப்பிற்கும் எத்துணை ஊக்கம் காட்டுகிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இனி, ஒரு செயலைச் செய்வதற்குப் பலரும் துணை ந நிற்கலாம், அவர்களெல்லாரும் துணை நிற்கின்றாரே, என்று எண்ணிக் கூட அம்முயற்சியிலும் உழைப்பிலும் தாழ்ச்சி காட்டிவிடக் கூடாது. அவ்வாறு மெத்தனமாக விட்டுவிடுவது அவ்வினையையே ஊறு படுத்திவிடும் என்பார் மெய்யுணர்வாசான்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்

(468)

இங்கு பொத்துப்படும் என்பதற்கு அவ்வாறான முயற்சி நெகிழ்வால் அல்லது தளர்ச்சியால், செயல் வெற்றி பெறாதது மட்டுமன்று, தோல்வியும் இழுக்கும் ஏற்பட்டுவிடும் என்பது பொருள். அஃதாவது ஊதியம் வராதது மட்டுமன்று, இழப்பும் ஏற்படும் என்பதாகும். எனவே, எந்தச் சூழலிலும் முயற்சியும் அதனடிப்படையிலான உழைப்பும் தாழ்ச்சியுறவே கூடாது என்று அறிக.

7. இழப்பால் சோர்வுறுதல் கூடாது

இனி, ஏதோ ஒரு காரணத்தால் நாம் தொடங்கிய வினையில் நாம் எதிர்பார்த்த இழப்பும் வரலாம். அவ்விடத்திலும் நாம் ஊக்கத்தையும் உழைப்பையும் தாழ்த்திக் கொள்ளுதல், தளர்த்தி விடுதல் கூடாது. ஆக்கம் வராமைக்கும் அல்லது இழப்புக்கும் உரிய காரணத்தை நன்கு ஆய்ந்து கண்டுபிடித்து, மேலும் அத்துறையில் அல்லது செயலில் தாழ்ச்சியுறாது உழைத்தால், கட்டாயம் நாம் விரும்பிய ஆக்கம் வரவே