பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

 அநேக இதர பாஷைகளிலிருந்தும் பதங்கள் எடுத்துக்கொள்ளப்பட் டிருக்கின்றன; இதனால் இப்பாஷைக்கு என்ன குறைவு? தமிழில் சமஸ்கிருத மொழிகள் இருப்பதைவிட இங்கிலீஷ் பாஷையில் அதிகமான லதீன் மொழிகள் இருப்பதாக ஒரு பாஷா தத்துவ சாஸ்திரியார் கூறுகிறார். நமது தாய்ப் பாஷையாகிய தமிழ் பாஷையினின்றும்கூட இங்கிலீஷ் பாஷையானது சில வார்த்தைகளே இரவல் வாங்கிக்கொண் டிருக்கிறதென்பதை பிறகு நிருபிப்போம். இதனால் இங்கிலீஷ் பாஷைக்கு என்ன தாழ்வு ? நாகரீகம் விர்த்தியாகி உலகிலுள்ள ஜாதியாரெல்லாம் ஒருவரோடொருவர் கலக்க ஆரம்பித்த பிறகு கலப்படமில்லாத பாஷையே கிடையாதென்றே ஒருவாறு கூறலாம்,

மேற்சொன்னபடி ஒரு பாஷையில் இதர பாஷை பதங்கள் புகுவதற்கு அநேக காரணங்களுண்டு, முதலாவது அப்பாஷை வழங்கும் நாட்டைச் சுற்றிலும் வேறு பாஷைகள் பேசுபவர்கள் வசிப்பதாம்; இரண்டாவது, வேறு பாஷைகள் பேசுபவர்கள் அந்நாட்டில் வந்து குடியேறுவதாகும்; மூன்றாவ்து வேறு பாஷை பேசும் அந்நிய நாட்டார் அத்தேசத்துடன் வர்த்தகம் செய்வதாம்; நான்காவதாக, வேறு பாஷை பேசுபவர்கள் அந்நாட்டை ஜெயித்து அரசாள்வதாம்.

இனி இவைகள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு தமிழ் பாஷையில் புதிய பதங்கள் புகுந்ததைப் பற்றி ஆராய்வோம்.

(1) முதலாவது தெலுங்கு பாஷையானது, ஆதி தமிழ் பாஷையிலிருந்து பிரிந்த பாஷையன்று, வேறு பிரத்யேகமான பாஷையென்று நாம் அபிப்பிராயப்படுவோமாயின், ஆந்திர தேசம் ஏற்பட்ட, தமிழ்நாட்டின் வடக்கிலிருக்கும் தேசத்திலிருந்து தெலுங்கு பதங்கள், அதிகமாய் வந்தனவென்று நாம் ஒப்புக்கொள்ளவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் தொல்காப்பிய நூலார், தெலுங்கென்றும் வடுகென்றும் இரு பிரிவாகக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது; வடுகு என்பது வடக்கத்திய பாஷையெனப் பொருள்படும். ஆயினும் தற்காலம் பல பண்டிதர்களால் இவ்விரண்டும் ஒன்றாகவே மதிக்கப்படுகின்றது. "வடுகன் தமிழ் அறியான்" என்று காளமேகப் புலவர் கூறியது. இச்சந்தர்ப்பத்தில் நமக்கு ஞாபகம் வருகிறது. நமது தமிழ் நாடானது சற்றேறக் குறைய மூன்று பக்கங்களிலும் சமுத்திரத்தினால் சூழப்பட்டிருத்தலால், வடக்கு வழியாகத் தவிர அன்றி அயல் நாட்டுப் பதங்கள் தமிழில் புகுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் இல்லாமற் போயிற்று.