பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

செயலும் செயல் திறனும்



என்பது திருவள்ளுவம்.

இதில் அளவறித்து வாழுதல் என்பது, அறம், பொருள், இன்பம் ஆகிய உறுதிப் பொருள்கள் மூன்றையும், அவற்றின் உட்கூறுகளையும், அவற்றின் கருப்பொருளையும், காரணப் பொருள்களையும் உள்ளடக்கியது என்க. இஃதோர் அளவையறிதல் என்னும் கணக்கியலையே கொண்டதாகும்.

எனவே, வாழ்க்கை நிலைகள் முழுமைக்கும் கணக்கியலறிவு எத்துணை இன்றுயமையாதது என்பதைத் தெள்ளிதின் உணர்ந்து கொள்க.

15. அழகுணர்வு: அழகுணர்வு இல்லாமற் போயின் எந்தச் செயலும் செப்பமாக இராது கவர்ச்சியுடன் திகழாது. எந்தச் செயலாக இருப்பினும், அது சில கருவிகளைக் கொண்டே இயங்க வேண்டும். அந்தக் கருவிகள் செப்பமாக இராமல் போனால், செயலும் செப்பமாக இருக்க முடியாதன்றோ? எனவே, அழகுணர்வை செப்பத்தை அளவிடும் ஒரு கருவியாகவே இயற்கை கொடுத்திருக்கிறது. அழகுணர்வுதான் செப்பத்தையும், ஒழுங்கையும், மன ஈடுபாட்டையும், செயலூக்கத்தையும், பொருள் காப்புணர்வையும், உரிமைப் பிடிப்பையும் நமக்குத் தருகிறது. ஒரு பொருள் அழகாக இல்லையானால் நாம் அதை விரும்பமாட்டோம் விரும்பாத பொருளைக் காக்க மாட்டோம் காக்கப் பெறாத பொருளுக்கு நாம் ஏன் உரிமை கொண்டாடப் போகிறோம்? எண்ணிப் பாருங்கள். இவ்வுணர்வும் இயற்கையாக அமைதல் வேண்டும்.

16. சுவையுணர்வு:

மாந்தனுக்குச் சுவையுணர்வும் மிகவும் இன்றியமையாத ஒர் இயற்கை உணர்வாகும். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சுவையுணர்வு அவ்வளவாகத் தெரிவதில்லை. பொறிகளின் கூர்மையான உணர்வுகளுள் ஒன்று சுவையுணர்வு. அறிவுணர்வு கூர்மையெய்த எய்த பொறிகளும் கூர்மையான புலன் உணர்வுகளைப் பெறுகின்றன. அக்கால் பார்வையுணர்வு, நுகர்வுணர்வு, சுவையுணர்வு, செவியுணர்வு, மெய்யுணர்வு ஆகிய ஐம்புலன் உணர்வுகளும் துல்லியமான உணர்வுகளாக வளர்ச்சியுறுகின்றன. நாச்சுவை இழிவன்று. உடல் நன்கு இயங்குவதற்கு உணவு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாதது உணவுக்குச் சுவையும். சுவையுணர்வு, நல்ல உணவைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. இயற்கைப் பொருள்கள் அனைத்தும் ஒவ்வொரு சுவையுடையன. அறிவுணர்வு உள்ள ஒருவனுடைய