பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

137



8. உடல் தாக்கம்

இது நமக்குள்ளேயே ஏற்படும் தாக்கம். ஒரு செயல் தொடக்கப் பெற்று நடந்து வருகையில், உடல் அவ்வினைச் சுமை தாளாது நலிவடைதலும், அதனால் உள்ளத்தின் உணர்வு தாக்கமுற்றுச் சோர்வடைதலும், அதன் வழி நம் அறிவு தளர்ச்சியுற்றுப் போதலும், நமக்கு நாமே வருவித்துக் கொள்ளும் இடையூறுகள் ஆகும். எனவே இவை அகத் தாக்கங்களாக ஆகின்றன. இவ்வகத் தாக்கமாக வருகின்ற இம்மூன்று நிலைகளையும் படிப்படியாக ஆராய்வோம்.

1. உடல் நலிவு

ஒரு செயல் அல்லது வினை என்பது பெரும்பாலும் உடலைக் கொண்டுதான் தொடங்கப் பெறுகிறது; அதைக் கொண்டுதான் முழுமை பெறுகிறது; அல்லது வெற்றி பெறுகிறது. உடலே அனைத்துக்கும் மூலமுதல், உடல் இல்லையானால் வாழ்வே இல்லை. உடல் என்பது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் கொண்டு இயங்குவது. ஒரு பொறியில் எப்படி அனைத்து உறுப்புகளும் சரியாக அமைந்தால்தான், அப்பொறி இடர்ப்பாடின்றி இயங்குமோ, அப்படி உடலின்கண் அகவுறுப்புகளாகவும், புறவுறுப்பு களாகவும் உள்ள சிறிய, பெரிய உறுப்புகள் அத்தனையும் சரிவர இயங்குமானால்தான் உடலும் சரிவர இயங்க முடியும். உடலின்றி உலகமில்லை. உடல் நலிவடையும் பொழுது உலக வாழ்வே தொய்வடைந்து போகிறது.

2. உடல்தான் அனைத்தும்

எனவே, செயலுக்கு அடிப்படையான முதல் உடலே. சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும் என்பது வழிவழியாகக் கண்டுவரும் உண்மை. பலபேர் உடலைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

(377)

என்று திருவள்ளுவப் பெருமான் ஊழ் அதிகாரத்துள் குறித்த உண்மை, முதலில் உடலே நோக்கியதே ஆகும். எத்தனைக் கோடி பணத்தைத் தொகுத்து வைத்திருந்தாலும், அல்லது எத்தனை ஆயிரம் செல்வங்களை ஈட்டியிருந்தாலும், அவற்றைத் துய்ப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் முதலில் உடல் முழுத்திறன் பெற்றதாக இருத்தல் வேண்டும். உடல் நன்றாக இல்லையானால், இவ்வுலகச் செயல்கள் ஒன்றிலும் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள இயலாது. உடல் இல்லையானால் அனைத்தும் இல்லை. உடல்தான் உலகம்; உடல் தான் உயிரியக்கத்திற்கு