பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வெற்றவே ழத்தொடு பட்டு மற்றவர்
கருந்தலை யொடுவெண் ணினங்கழு கோடு
பருந்தலைத் தெங்கணும் பரப்ப உயர்த்துக்
கருங்கட லடையத் தராதலந் திறந்து
கலிங்க மேழுங் கைக்கொண்டு.”

முடிப்புரை

இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழனானமைக்கு அவனுடைய படைத்தலைவனே காரணன் ஆவான் ஆனால், அப்படைத் தலைவன் யார் என்பதை இலக்கியம் அல்லது கல்வெட்டுச் சான்றுகளால் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. அவனுடைய தலைமைச் சேனதிபதி, விக்கிரம சோழச் சோழிய வரையனான இராசராசன் என்பான் கங்கைப் படையெடுப்பில் தலைமை வகித்து நடத்தி யிருக்கலாம் என்று ஆய்வாளர் கூறுவர். முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் நிகழ்ந்த கலிங்கப் படையெடுப்பில் வெற்றிகொண்ட கருணாகரத் தொண்டைமான் பெயரும் கல்வெட்டுக்களில் தெளிவாக இடம் பெறவில்லை. என்றாலும் அவன் புகழை எஞ்ஞான்றும் நிலைபெறச் செய்யக் கலிங்கத்துப் பரணி யொன்றே சாலும். பரணி பாடிய பாவலனையும், பரணி கொண்ட காவலனையும், கலிங்கப் பரணி காவலனுக்குச் சூட்டிய தோன்றலாகிய தொண்டைமானையும் போற்று வோமாக !

காட்டிய வேழ அணிவாரிக்
    கலிங்கப் பரணி நம் காவலன்மேல்
சூட்டிய தோன்றலைப் பாடீரே !
     தொண்டையர் வேந்தனைப் பாடீரே ! (தா. 535