பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43


9. கோவலன் கொல்லப்படுதல்

அபசகுனம்

இங்ஙனம் கோவலன் வீட்டை விட்டு வெளிப்பட்டதும் அவனைக் காளை ஒன்று எதிர்த்துப் பாய வந்தது அஃது அபசகுனம் என்பதைக் கோவலன் அறியான்; ஆதலால் கடைத்தெருவை நோக்கிக் கடுகி நடந்தான்.

பொற்கொல்லன்

கோவலன் கடைத் தெருவிற் செல்லும் பொழுது எதிரில் கூட்டமாகச் சிலர் வருவதைக் கண்டான். அவர் அனைவரும் பொற்கொல்லர் ஆவர். அவர்கட்கு நடுவில் கம்பீரமாக ஒருவன் வந்தான். அவன் அரண்மனைப் பொற்கொல்லன். ஏனையோர் அவனுக்குக் கீழ் வேலை செய்து, வந்தவர் ஆவர். அவர் அனைவரும் கோவலன் சென்ற திசை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அரண்மனைப் பொற்கொல்லன்

கோவலன் அரண்மனைப் பொற்கொல்லனைச் சந்தித்து, “அரச மாதேவியர் அணியத்தக்க சிலம்பு. ஒன்று என்னிடம இருக்கின்றது. நீ அதனை விலை மதிக்கவல்லையோ?” என்று கேட்டான். அப்பொற் கொல்லன் கை தொழுது, “ஐயனே, அடியேன் பாண்டியர் பெருமானது அரண்மனைப் பொற்கொல்லன். அடியேன் பாண்டி மாதேவியார்ககு, அணிகள் செய்பவன்.” என்று அடக்கமாகக கூறினான்.

பொற்கொல்லன் யோசனை

உடனே கோவலன் தன் மூட்டையை அவிழ்த்துக் கண்ணகியின் காற்சிலம்பைக் காட்டினான்.