பக்கம்:உத்தரகாண்டம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    287


தன் குற்றங்களை மறைக்க, பிறர் முகத்திலும் குப்பையை வீசுவதுதான் பரிகாரமா?... அவள் பேசவேயில்லை.

“சரி, அது கெடக்குது விடுங்க, அத்தை. கடசீல நீங்க வந்து சேந்தீங்களே, அதாம் பெரிசு. நா கும்புடாத தெய்வம் இல்ல. ஒவ்வொருத்தரும் வந்து கூப்புட்டு, நீங்க வரயில்ல. அவங்களுக்கு இதே குறையிலதான் ‘அட்டாக்’ வந்திச்சி. இத இப்ப கூட்டம்னு போயிருக்காங்க. அர்ச்சிதா கூடப்போயிருக்கு. அது யு.எஸ்.ல படிச்சிதா, அதுதா ரொம்பக் கவனம். நா, இத இப்பக்கூட ரெண்டுநா, திருப்பதிக்குப் போயி, அங்கப்பிரதட்சிணம் பண்ணிட்டு வார. திருக்கல்யாணம் பண்ணி வைக்கிறேன், கேசுகீ செல்லாம் போகட்டும்னு வேண்டிட்டிருக்கிற... அங்க தங்கிருக்கிற காட்டேஜ்ல அக்காதா ஃபோன் போட்டா. அத்த தல சுத்தி விழுந்திட்டாங்க, உடனே ரங்கன இங்க கொண்டாரச் சொல்லிருக்கிறன்னு... நல்லாப் பாக்கச் சொல்லுங்க. ஸ்பெஷலிஸ்ட் சுந்தரராசை வந்து பாக்கச் சொல்ங்க, ஸ்கேன்‘கீன்’ எதுன்னாலும், என்ன செலவானலும் பாக்க வோணாம்னே. சாப்புட்டீங்களா?... துரும்பா எளச்சிட்டீங்க...”

மூச்சு விடாமல் பட்டுப்பாய் விரிக்கிறாள்.

“உங்கக்கா ரஞ்சிதம் இந்த வூட்ல இல்லையா?”

“இதே காம்பவுண்டுதா. சொல்லப்போனா, அவுங்கதா இங்க படுத்திருப்பாங்க. அக்காவுக்கு அந்த ஆபிரேசனுக்குப் பிறகு நடமாட முடியல. தெரபிஸ்ட் வராங்க. கால்ல, நாலு விரல எடுத்திட்டாங்க. இப்பக்கூட அத்தையப் பாக்கணு முன்னாங்க. பாக்கலாம்னு சொல்லிட்டு வந்தேன். உங்களுக்கு எது வோணுன்னாலும், தயங்காம கேளுங்க. நானும் உங்க சந்திரி போலதா...”

அவள் கையைப் பற்றுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/289&oldid=1050370" இலிருந்து மீள்விக்கப்பட்டது