பக்கம்:இலக்கியத்தில் விலங்குகளும், பறவைகளும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

– 62 –

" அன்னச் சேவலன்னச் சேவல்
........................................................................
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடமலைப் பெயர் குவையாயின் இடையது
சோழ ந்ன்னாட்டுப் படினே
........................................................................
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை யென்னே மாண்ட நின்
இன்புறு பேடை யணியத் தன்
நன்புறு நல்கல நல்குவ னினக்கே ”

(புறம்)

இது போன்றே பிற்காலப் புலவர்களில் ஒருவரான சத்தி முற்றத்துப் புலவரென்பவர் பாண்டியனைக் காணவந்த இடத்துப் பாழடைந்த சத்திரத்தில் தங்கி இருக்குங்கால் வானத்திலே செல்லும் காரையினைப் பார்த்து,

" சிவந்த கால்களையுடைய நாரையே! பனங்கிழங்கை நடுவிற் கீறினாற்போன்ற தோற்றத்தையுடைய பவளத்தைப்போலச் சிவப்பாயும் கூர்மையாயும் உள்ள வாயையுடைய செம்மையான நிறத்தோடு கூடிய கால்களையுடைய நாரையே! நீயும் உன் மனைவியும் தென்திசைக் குமரியாடி வடக்கே ஏகுவீராயின் இடையிலுள்ள என் பதியாகிய சத்திமுற்றத்திலுள்ள பொய்கையில் தங்கி, சுவர்ப்பல்லியின், சொல்லை. இன்னதென்று எதிர்பார்த்திருக்கும் எனது இனிய இல்லாளைக் கண்டு என்னைக் கண்டதாகச் சொல்லுக! " என்று சொல்லியிருப்பது சிந்தனைக்கொரு விருந்தாகும். நகர் சோதனைக்கு வந்த பாண்டிய மன்னன். இப்பாடலைக் கேட்டுக் கசிந்துருகி வாடையால் வாடிய செந்தமிழ்ப் புலவருக்குத் தனது பட்டாடையைப் போர்த்திச்சென்றனன்.பின்னர் மறுநாள் புலவரை அழைத்து வரையாது வழங்கினன். பாண்டிய மன்னனது மனத்தினைக் கரையச் செய்த அப்பசுந் தமிழ்ப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது.