பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

விற்ற கடைகள் பலவாகும்; வெள்ளிப் பாத்திரக் கடைகள் பலவாகும்; வெள்ளி நகைக் கடைகள் பல என்னலாம், செம்பு, பித்தளை, ஈயம் முதலிய உலோகங்களால் பலவகைப் பாத்திரங்களைச் செய்து விற்ற கடைகள் ஒரு பால் இருந்தன. இரும்புச் சாமான்களை விற்ற கடைகள் ஒருபக்கம் இருந்தன. எழுதுவதற்கு என்று தயாரிக்கப்பட்ட பனை ஓலைக் கட்டுகளும் எழுத்தாணிகளும். விற்கப்பட்ட கடைகள் மற்றொருபக்கம் இருந்தன. கொற்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட முத்து. வகைகளை விற்ற கடைகள் பலவாகும். கொடிப் பவளம், பவள மாலைகள் இவற்றை விலை கூறிய கடைகள் பலவாகும்.

இங்ஙனம் பல வளங்களாலும் பொலிவுற்றுத் திகழ்ந்த பீடு மிக்க மாட மதுரையைக் கோவலன் கசன்று கண்டான்.


8. கோவலனும் கண்ணகியும்

அடிகள் அறிவுரை

மாதவர் இருக்கையில் தங்கிய கவுந்தியடிகள் கோவலனின் வருத்தத்தை அகற்ற எண்ணினார். அவர் அவனை அன்புடன் பார்த்து, நீ சென்ற, பிறப்பில் நல்வினையை மிகுதியாகச் செய்தாய்; ஆயினும் சிறிதளவு தீவினையைச் செய்தனை: அதனாற்றான் பெற்றோரையும் மற்றோரையும் விட்டுக் காதலியுடன் வந்து துன்புறுகின்றனை. அருந்தவத்தோர் செய்யும் நல்ல உபதேச மொழி களைக் கேளாமல் தீய செயல்களில் ஈடுபடுபவர் பலராவார். அவர் அத்தீச்செயலால் துன்பத்தை