பக்கம்:சிலப்பதிகாரக் காட்சிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

மடலில் எழுதி, வசந்தமாலை என்ற தோழியிடம் அதனைக் கொடுத்து அனுப்பினாள். அவள் கடைத் தெருவில் இருந்த கோவலனைச் சந்தித்து, மாதவியின் துன்ப நிலையைக் கூறிக் கடிதத்தை நீட்டினாள். கோவலன் அக்கடிதத்தை வாங்காமல் ‘ஆடல் மகள் பொய்யை மெய்போல நடிப்பதில் வல்லவள்,” என்று கூறி அகன்றான். அவன் கூற்றை வசந்த மாலை கூறக் கேட்ட மாதவி மனம் வருந்திக் கட்டிலிற் சாய்நதான்.


6. மதுரைப் பிரயாணம்

கண்ணகி கண்ட கனவு

மாதவியை விட்டுப் பிரிந்த கோவலன் எங்குச் சென்றான்? அவன் நேரே கண்ணகி இருந்த மாளிகையை நோக்கிச் சென்றான். அவன் சென்று கொண்டிருந்த பொழுது, கண்ணகி தன் பார்ப்பன தோழியான தேவந்தி என்பவளிடம் தான் கண்ட கனவைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள்;[1] “தோழி, நானும் என் கணவனும் ஒரு பெரிய நகரத்திற் புகுந்தோம். அங்கு வீண்பழி ஒன்றை என் கணவர் மேல் சுமத்தி அவருக்குத் தீங்கு இழைக்கப்பட்டது. பின்னர், யான் அந்நகரக் காவலன் முன்சென்று வழக்குரைத்தேன். ஆதலால், அவ்வரசனுக்கும் அவ்வூருக்கும் தீங்கு நேரிட்டது. இக்கனவு தீக்கனவு ஆதலின் நினக்குயான் சொல்லாதிருந்தேன். இவ்வாறு தீவினையுற்ற என்னுடன் பொருந்திய கணவனுடனே யான்பெற்ற நல்ல திறத்தை நீ கேட்பாய் ஆயின், அது நினக்கு நகையைத் தரும்" என்றாள்.


  1. கணவனுடன் சுவர்க்கம் புகுவதாகக் கனவிற் கண்டமை.